சென்னை துறைமுகத்திலுள்ள டாப்ளர் ரேடார் கருவி இந்திய வானிலை சூழல்களை அறிவிக்கும் முக்கிய கேந்திரமாக இருக்கிறது. அதேபோல, சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கம், இந்திய கப்பற்படையினருக்கும், கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கும் வழிகாட்டியாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், இந்த இரண்டு முக்கிய கருவிகள் குறித்து மத்திய மோடி அரசை நோக்கி கேள்வி எழுப்பியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான தயாநிதிமாறன்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’சென்னை துறைமுகத்திலுள்ள வானிலை ஆய்வு டாப்ளர் ரேடார் பழுதாகி 2 ஆண்டுகளாகியும் சீரமைக்கப்படவில்லை. இப்போதோ, மெரினா கலங்கரை விளக்கத்தின் மேலுள்ள கடற்கரை கண்காணிப்பு ரேடாரும் இயங்கவில்லை எனத் தெரிகிறது. மத்திய அரசு, சென்னையை தொடர்ந்து அலட்சியப்படுத்துவதன் நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தயாநிதி மாறன்.