தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பதற்கு முன்பாகவே அரசியல் கட்சிகள் பிரச்சாரம், கூட்டணி என பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தது. இந்நிலையில் நேற்று (26/2/2021) சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், வாக்கெடுப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடைமுறைகளும் அமலுக்கு வந்தது. தற்பொழுது அரசியல் கட்சிகள் கூட்டணிக்கான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன.
தேர்தல் தேதி அறிவித்த சில மணி நேரங்களில், ஐ.ஜே.கே. (இந்திய ஜனநாயகக் கட்சி) -வின் தலைவர் ரவி பச்சமுத்து மற்றும் சமகவின் தலைவர் சரத்குமார் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "சமக மற்றும் ஐ.ஜே.கே. ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து வருகின்ற சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறோம். கூட்டணியின் பெயர் குறித்து விரைவில் அறிவிப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து, சமக தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும், தமிழக மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும், தமிழகத்தை இந்திய அளவில் முதன்மை மாநிலமாக முன்னேற்றுவதற்காகவும் இந்தக் கூட்டணி, மாற்றத்திற்கான முதன்மை அணியாகச் செயல்படும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது சமக தலைவர் சரத்குமார் மற்றும் ஐ.ஜே.கேவை சேர்ந்த நிர்வாகி ரவிபாபு ஆகியோர் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தனர். நேற்று மூன்றாவது அணி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில் இன்று கமல்ஹாசனை சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில் வரும் தேர்தலில் ஐ.ஜே.கே-சமக கூட்டணியில் கமலின் மக்கள் நீதி மய்யத்தையும் கூட்டணிக்கு இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பிற்கு பிறகு மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், ''நல்ல எண்ணங்களை கொண்டவர்கள் இணைந்தால் நன்றாக இருக்கும் என்பதால் கமலிடம் பேசினேன். தேர்தல் கூட்டணி தொடர்பாக கமல்ஹாசனிடம் இருந்து நல்ல முடிவு வரும். தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்தோம். ஆனால் இந்த தேர்தலுக்காக எந்த ஒரு கூட்டணி பேச்சுவார்த்தையும் அதிமுக நடத்தப்படாமல் இருந்தது. தொடர்ந்து பயணித்த எங்களை அழைத்து பேசியிருக்கலாம் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. இந்த கூட்டணி இறுதி செய்யப்பட்டால் முதலில் வெற்றிபெறுவதற்கான வேலைகளை செய்வோம். முதல்வர் பதவி குறித்தெல்லாம் பின்னர் முடிவு செய்யப்படும். மக்களுக்கு நல்லது செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன்'' என்றார்.