கடந்த 2017 ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடந்த போது ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டதாக 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கை விரைவாக விசாரணை செய்ய வேண்டும் என்று தங்க தமிழ்ச்செல்வன் தரப்பில் இருந்து கோரிக்கை மனு தாக்கல் செய்தார். எனவே, இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் இந்த வழக்கை பொருத்தவரை அரசுக்கு எதிராக தீர்ப்பு வரத்து என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது. மேலும் அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில், ஒ.பி.எஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக கொடுத்த புகார் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தான் வழக்கு போடப்பட்டுள்ளது.
ஆகையால் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் இருந்து தீர்ப்பாக வரும் என்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த வழக்கை வைத்து ஓ.பி.எஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏ க்களை தொடர்ந்து தனது கட்டுப்பாட்டில் வைக்கவும், ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும் முதல்வர் எடப்பாடி கருதுவதாக தெரிகிறது. மேலும் திமுக போட்ட இந்த வழக்கால் மறைமுகமாக எடப்பாடிக்கு உதவி வருகிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.