புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் புதுச்சேரியில் உள்ள பல்வேறு தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று நெல்லித்தோப்பு தொகுதியில் நடைப்பயணம் நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
நடைப்பயணம் இந்திரா காந்தி சதுக்கம் அருகே வந்த போது ராகுல்காந்தியின் எம்.பி பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி சாலை மறியலை தொடர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, " குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ஒருவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் ராகுல் எம்.பிக்கு இரண்டு ஆண்டு காலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ராகுல் எம்.பி பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டு ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது நீரவ் மோடி, லலித் மோடி போன்றவர்கள் இந்தியாவில் உள்ள அரசு வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பித்துச் சென்றனர். அதற்கு நரேந்திர மோடி துணையாக இருக்கிறார் எனக் கூறியதற்கு மோடி சமுதாயத்தையே ராகுல் இழிவுபடுத்திவிட்டார் என வழக்கு போடப்பட்டுள்ளது.
இது ஒரு பொய் வழக்கு. மோடி சமுதாயத்தை தவறாகப் பேசவில்லை என்பது ராகுல் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சைக் கேட்கும் போது தெளிவாகத் தெரியும். இது பழிவாங்கும் நடவடிக்கை. 'அதானியை பணக்காரராக்கி பொதுத்துறை நிறுவனங்களை அவருக்கு வழங்கி உள்ளீர்கள். இது தொடர்பாக பிரதமர் பதிலளிக்க வேண்டும்' என்று ராகுல் பார்லிமெண்ட்டில் கேள்வி எழுப்பினார். இப்படி ராகுல் கேள்வி எழுப்புவதை, பேசுவதை தடுக்க வேண்டும் என்பதற்கான திட்டமிடப்பட்ட சதி இது. இதனை சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திப்போம். நாட்டு மக்களின் ஜனநாயகம் காக்க தெருவில் இறங்கி போராடுவோம். இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.