புதுச்சேரி மாநில தேசிய பேரிடர் ஆணைய கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின் முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ பதிவில், "வரும் செவ்வாய்கிழமை முதல் அனைத்துக் கடைகளும் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். பெட்ரோல் பங்குகளும் 2 மணி வரை மட்டுமே திறக்கப்படும். கடற்கரை சாலை வரும் 10 நாட்களுக்கு மூடப்படும். மதுபானக் கடைகள் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
தமிழகத்தில் ஊரடங்கிற்குப் பின்பு புதுச்சேரிக்குள் அண்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவு வருவது தெரிகின்றது. அதனால் அவர்கள் தங்களைச் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் கரோனா நோய்த் தொற்றைக் கண்டறிய தினந்தோறும் அதிகளவு இந்திரா காந்தி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் சோதனை செய்யப்படுகின்றது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் covid care centre துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் அதிகளவு தேவைப்படுவதால் அவர்களின் இடங்கள் நிரப்படவேண்டும். மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. முகக் கவசம் அணியாமல் வெளியே நடமாடினால் 100 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
அனைத்துக் கடைகளும் காலை 6 மணிமுதல் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். பெட்ரோல் பங்குகளும் 2 மணிவரை மட்டுமே திறக்கப்படும். கடற்கரைச் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் 10 நாட்களுக்கு மூடப்படும். மதுக்கடைகளும் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.
தொழிற்சாலைகள் இயங்க 3 மணிவரை அனுமதி அளிக்கப்படும். வேலை செய்வோர் வீடு செல்லநேரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயப் பணிகள், அத்தியாவசியப் பொருட்கள் செல்லும் வாகனங்கள் மத்திய அரசின் உத்தரவின் படி செயல்படும். பெரிய காய்கறி மார்க்கெட் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும்.
கரோனா தொற்று உள்ளதா எனக் கண்டறிய வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்யப்படும்" என அவர் கூறினார்.