''நான் அரசியலைவிட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்'' என அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இனி சசிகலா அரசியலில் ஈடுபடமாட்டார் என்றும், தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அவர் அரசியலில் ஈடுபடுவார் என்றும் விவாதங்கள் நடந்து வந்தன.
சென்னையில் கிருஷ்ணப்பிரியாவின் தி.நகர் இல்லத்தில் தங்கியிருந்த அவர், கடந்த மாதம் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்தவாறே ஒருமாத காலமாக தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டு வந்தார். கடந்த வாரம் சென்னை திரும்பிய சசிகலா, தி.நகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீட்டில் தங்கியுள்ளார்.
இந்தநிலையில்தான், நீண்ட நாட்களாக போயஸ் கார்டனில் தனக்காக கட்டப்பட்டு வரும் வீட்டை நேற்று (09.04.2021) சசிகலா நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, விவேக் ஜெயராமன் மற்றும் சசிகலாவின் உறவினர்கள் உடனிருந்தனர். வேதா நிலையம் போன்ற அமைப்பிலேயே இந்த வீடு கட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக கட்டட பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இதனால், சுமார் 2 மணி நேரமாக அங்கேயே இருந்து கட்டட பணிகளை விரைவில் முடிக்க சசிகலா அறிவுறுத்தியதாக தெரிகிறது.
தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக வராது என தெரிந்த சசிகலா, அதனால்தான் தேர்தலுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டு கோயில் கோயிலாக சென்றதாகவும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் தனது தலைமையில் அதிமுக ஒன்றிணையும் என்றும் அவர் நம்புவதாகவும் கூறப்படுகிறது. அதனால்தான் தன் தோழி ஜெயலலிதா அரசியல் பயணம் தொடங்கிய போயஸ் கார்டனிலேயே தானும் அரசியல் பயணத்தை தொடங்கத் திட்டமிட்டு, விரைவில் போயஸ் கார்டன் இல்லப் பணிகளை முடிக்கச் சொல்லி இரண்டு மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமென்று தனது விசுவாசிகளாக இருக்கும் ஓய்வுபெற்ற அதிகாரிகளிடம் விசாரித்தபடியே இருக்கிறாராம் சசிகலா. கோயில்களுக்கு விசிட் அடித்தபோதும் இதைத்தான் கேட்டாராம். ஆட்சி மாற்றம் வரும் என்று நினைக்கும் சசிகலா, வாக்கு எண்ணப்படும் நாளான மே 2ஆம் தேதி, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குப் போய் வணங்கிவிட்டு, அங்கிருந்து அதிமுக தலைமையகத்துக்கு அதிரடியாக விசிட் அடிக்கும் திட்டத்திலும் இருக்கிறாராம். கட்சியின் லகானைக் கைப்பற்றும் முயற்சியிலும் சசிகலா இறங்க இருக்கிறார் என்று அவர் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.