தமிழகத்தில் தேர்தல் திருவிழா துவங்கிக் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் அமர முடியாத தி.மு.க. தற்போது படு சுருசுருப்பாக தங்களுடைய களப் பணியைச் செய்யத் துவங்கியுள்ளது.
அதன் ஒருபகுதியாக திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தன்னுடைய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகள் மட்டுமல்லாது புறநகர்ப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும் ஆங்காங்கே தி.மு.க. சார்பில் நடைபெறும் கிராமசபைக் கூட்டத்தில் தலைமைவகித்து கட்சித் தொண்டர்களிடமும், பொதுமக்களிடமும் நேரடியாகக் கலந்துரையாடி வருகிறார்.
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பின் கீழ், பல பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் நாள் ஒன்றுக்கு, குடும்பத்திற்கு எவ்வளவு செலவு ஆகிறது. அதனைச் சம்பாதிக்க நாம் நாளை என்ன செய்யப்போகிறோம் என்று சிந்தித்து, நம்முடைய உரிமைகளைப் பல இடங்களில் விட்டு விடுகிறோம். உங்களுடைய பிரச்சனையை எப்போதும் தங்களுடைய சொந்தப் பிரச்சனையாக பார்க்கும் ஒரே கட்சி தி.மு.க.தான். கடந்த 10 ஆண்டுகாலம் தி.மு.க. அதிகாரத்தில் இல்லை.
இந்த முறை அதைப் பிடித்துக்காட்ட வேண்டும். உங்கள் ஒவ்வொருவருடைய உழைப்பும் முக்கியம், குடும்பங்களைத் தாண்டி சமூக அக்கறையோடு நீங்கள் வாழவேண்டும். தொகுதி மக்களாகிய உங்கள் பிரச்சனைகளைத் தயங்காமல் முன்னெடுத்துச் செல்வோம். அதற்குத் தீர்வும் காண்போம்” என்று பேசினார்.
இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தங்கள் பகுதிகளில் செயல்படுத்தப்படாமல், செய்யப்படாமல், கிடப்பில் போடப்பட்டுள்ள பல பிரச்சனைகள் குறித்து அவரோடு உரையாடினார்கள்.