கடந்த காலங்களில் நான் உட்பட கட்சியினர் பலர் மக்களிடம் இருந்து தொலைவில் இருந்துவிட்டோம். இது தவறுதான் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்தியா முழுவதும் 12 மாநிலங்களில் 3,570 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து உரையாடி வருகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடியை அசைத்து இந்த யாத்திரையைத் தொடக்கி வைத்தார். இந்தியாவின் இறையாண்மையும் அரசியலமைப்புச் சட்டமும் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி குமரி முதல் காஷ்மீர் வரை இந்தப் பயணத்தை 150 நாட்களுக்கு மேற்கொள்ளும் ராகுல்காந்தி, நேற்று நடைபயணத்தில் 100 ஆவது நாளை நிறைவு செய்தார்.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காங்கிரஸ் செயலிழந்துவிட்டது எனக் கூறுவது தவறு. எனது வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பாஜகவை காங்கிரஸ் நிச்சயம் வீழ்த்துவது நடக்கும். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் பற்றி கேட்கின்றீர்கள். அது எங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றுதான். ஏனென்றால், அவர்களால் பாஜகவிற்கு எதிராகப் போராட முடியாது.
கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி எந்தத் தவறும் செய்யவில்லை எனக் கூறப்போவது இல்லை. நான் உட்பட கட்சியினர் பலர் மக்களிடம் இருந்து தொலைவில் இருந்துவிட்டோம். இது வெளிப்படையாக இல்லையென்றாலும் கூட வலி தரக்கூடியது. இந்த நடைபயணத்தின் மூலம் அதை உணர முடிகிறது” எனக் கூறினார்.