திருச்சி எம்.பி. தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் அறந்தாங்கி திருநாவுக்கரசர் ஏற்கனவே 11 முறை தேர்தல் களம் கண்டவர். கூட்டணி கட்சியை அனுசரித்து செல்லக் கூடிய பக்குவம் கொண்டவர். வேட்புமனு தாக்கல் செய்வதற்காக காலை திருச்சி வந்த அவர், மதியம் 12 மணிக்கு காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பார் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டது. அதன்படி பத்திரிகையாளர்களும் அங்கு காத்திருந்தனர். ஆனால் கட்சி அலுவலகத்திற்கு வந்த அவர் வெளியே இருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு மன்றத்திற்கு நுழைந்துவிட்டார்.
சில நிமிடங்களுக்குப் பின் அங்கிருந்து புறப்பட தயாரானார். அப்போது தொண்டர்கள் ''புரட்சி தலைவரின் தவப்புதல்வன் திருநாவுக்கரசு வாழ்க, புரட்சித் தலைவர் வாழ்க'' என கோஷம் போட்டனர். உடனே சுதாரித்துக் கொண்டு ''புரட்சித் தலைவர் திருநாவுக்கரசு வாழ்க'' என கோஷமிட்டனர். இதை சிரித்தபடியே ரசித்தவர், ''நல்ல நேரம் முடிவதற்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். அதனால் உங்களை காக்க வைத்ததற்காக மன்னிக்க வேண்டும்'' என்று பத்திரிக்கையாளர்கள் கும்பிடு போட்டு விட்டு நேராக கலைஞர் அறிவாலயம் சென்று அங்கு திமுக நிர்வாகிகளை சந்தித்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்யப்புறப்பட்டார்.
அவர் செல்லும் இடங்களிலெல்லாம் ''வந்தே மாதரம்'' என்ற கோஷமும் ''புரட்சித் தளபதி'' என்ற குழப்பமும் ''புரட்சித் தலைவர்'' என்ற கோஷமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
ஆனால் நேற்று திருச்சியில் திருநாவுக்கரசரை சுற்றி இருந்தவர்கள் அறந்தாங்கியில் உள்ள அவரது ஆதரவாளர்கள். அவர்கள் யாரும் திருச்சி எம்.பி. தொகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்பது தான் அப்பட்டமான உண்மை. லோக்கல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் மருந்துக்கு கூட இல்லை என்பது தான் வேடிக்கையான விசயம்.
ஒரே ஆறுதலான விசயம் எம்.ஜி.ஆர். காலத்தில் மாவட்ட செயலாளராக இருந்த சவுந்திராஜன் ஓட்டலில் தங்கியிருந்த திருநாவுக்கரசரை நேரில் சந்தித்து தன்னுடைய ஆதரவை தெரிவித்தார். ''எம்.ஜி.ஆர். காலத்து ஆளுங்க நிறைய பேர் திருச்சியில் இருக்காங்க, அவர்களை சந்தித்து திருநாவுக்கரசரை ஜெயிக்க வைக்கும் வேலையை செய்வேன்'' என்றார்.
அதே போல உடன் சென்றவர்கள் யாரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் இல்லை. திருச்சி திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், அன்பழகன் என எல்லாம் திருச்சியை சேர்ந்த திமுக கூட்டமாகவே இருந்தது. கடந்த முறை சாருபாலா தொண்டைமான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 56 ஆயிரம் வாக்குகள் வாங்கியிருந்தார். காங்கிரஸ் ஓட்டை நம்பி ஜெயிக்க முடியாது என்பது திருநாவுக்கரசருக்கு தெரியும். முழுக்க திமுகவை நம்பி களத்தில் நிற்கிறார் என்பதே தற்போதைய கள நிலவரம்.