கரோனா தாக்கத்தால் நீட்டிக்கப்பட்டிருக்கும் 4-ஆம் கட்ட ஊரடங்கு மே 31-ஆம் தேதியோடு முடிவுக்கு வந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறந்து விடும் எனத் தனியார் பள்ளி-கல்லூரிகளின் உரிமையாளர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், ஊரடங்கை நீட்டித்து 5 ஆம் கட்ட பொது முடக்கத்தை ஜூன் 30 வரை அமல்படுத்தியிருக்கிறது மத்திய-மாநில அரசுகள். பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டதால் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரி நிறுவனங்கள், தங்களின் வருவாய் முடங்கி விட்டதாகக் ‘கவலை’ப்படுகிறார்கள்.
அதேசமயம், பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டாலும், 10 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதால், ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து பள்ளிகளைத் திறந்து விடுவார்கள் என எதிர்ப்பார்த்தனர். ஆனால், தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பதில் உறுதியான முடிவுகளை எடுக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை அவசரம் காட்டவில்லை.
இதனால் மேலும் ‘கவலை’யடைந்துள்ள தனியார் பள்ளி நிறுவனங்கள், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அதிகார மையத்தை ரகசியமாக அணுகியுள்ளன. அப்போது, ’பள்ளிகள் திறக்கப்படாததால் மிகுந்த நட்டத்தைச் சந்திக்கிறோம். இந்த மாதம் பள்ளிகள் திறக்கப்படாததால் முதல் தவனைக்கான கட்டணத்தை வசூலிக்க முடியவில்லை. இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது’ எனத் தங்களின் ‘கவலை’யை வெளிப்படுத்தியதுடன், பல்வேறு வகையிலான நிறுவனங்களுக்குத் தளர்வு செய்திருப்பது போல பள்ளிகளுக்கும் தளர்வு செய்து உடனடியாகப் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளன தனியார் கல்வி நிறுவனங்கள்.
கோரிக்கையைத் தொடர்ந்து சில பேரங்கள் பேசப்பட்டுள்ளன. இதனையடுத்து, ஒவ்வொரு பள்ளி நிர்வாகமும் 10 'L' தந்தால் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என சொல்லப்பட்டிருப்பதாகக் கோட்டையில் எதிரொலிக்கிறது.