இந்தி திணிப்பிற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் குறித்தான விளக்கப் பொதுக்கூட்டங்கள் திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பிரதமர் நேருவை மிரள வைத்தது திமுக. தமிழுக்கு பாதிப்பு என்றால் திமுக யாரை வேண்டுமானாலும் எதிர்க்கும். அண்ணாமலையை வீராதி வீரர் என்று பேசுகிறீர்கள். திட்டமிட்டு ஒரு சதியை அண்ணாமலை இங்கு செய்ய நினைக்கிறார். அவரே குண்டு வச்சிட்டு அவரே ஆட்களை செட் செய்கிறாரோன்னு சந்தேகம் வருகிறது. குஜராத்தில் ஏறத்தாழ 150 பேர் இறந்துவிட்டனர். அண்ணாமலை என்ன செய்து கொண்டு உள்ளார்” எனக் கேள்வி எழுப்பினார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திருச்சி மலைக்கோட்டை அருகே பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.
சேலம் கோட்டை மைதானத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “இந்தியை மத்திய அரசு தொடர்ந்து திணிக்கிறது. நாமும் தொடர்ந்து எதிர்க்கிறோம். இந்தியன் என்றால் தமிழன் தான் என்ற நிலை பல நாடுகளில் உள்ளது.” எனப் பேசினார்.