தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அடுத்த மெய்யூர் பகுதியில் தே.மு.தி.க சார்பில் கொடி ஏற்று விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 71 அடி கொடி மரத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார். அதன் பின்பு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தே.மு.தி.க வை பொறுத்தவரை நீட் தேர்வு தேவை இல்லாத ஒன்று என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஆனால், இந்த விவகாரத்தில் திமுக மாணவர்களை குழப்புகிறது. இதனால், ஏற்படும் மனக் குழப்பம் காரணமாகத் தான் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். நீட் தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் தற்கொலை தான் ஒரே தீர்வு என்று முடிவு செய்வது மிகவும் தவறான செயல் ஆகும். இந்த மனநிலையில் இருந்து மாணவர்கள் மாற வேண்டும். மாணவர்களை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
தே.மு.தி.க நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராக உள்ளது. தற்போது வரை எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு முடிவு செய்யப்படும். தமிழ்நாட்டில் நடைபயணம் புதிது அல்ல. பா.ஜ.க சார்பில் முதன்முறையாக தமிழ்நாட்டில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடைபயணத்தின் தாக்கம் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவில் தான் தெரியும். அதே நேரத்தில் இந்த நடைபயணத்தால் சர்க்கரை நோய் இருந்தாலும் சரியாகி விடும்” என்று கூறினார்.