கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கருணாபுரம் பகுதியில் நேற்று(19-06-24) கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்து பலியானோரின் எண்ணிக்கை தற்போது வரை 39 ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் உள்ள மருத்துவமனையில் விஷச் சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்களை, தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் 10, 15 நபர்களுக்கு உயிர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் போன்று கடந்த மரக்காணம் பகுதியில் பல உயிரிழப்பு ஏற்பட்டது. அப்போது கள்ளச்சாராயம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று முதல்வர் கூறினார். அதே போல் ஆட்சிக்கு வந்ததும் போதைப்பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்குவேன் என்று முதல்வர் கூறினார். ஆனால், இன்றைக்கு பல உயிர்கள் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.
எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது, அடிக்கடி வரும் முதல்வர், இன்றைக்கும் 38 உயிர்கள் இறந்த போதும் ஏன் இன்னும் வரவில்லை?. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய முதல்வர் ஏன் இன்னும் இங்கு வரவில்லை?. அதுமட்டுமல்லாமல், வெறும் தேர்தலை மட்டுமே மையாகக் கொண்டு ஆட்சி செய்கிறார்கள். வெறும் தேர்தல் அரசியல் மட்டுமே இங்கு நடக்கிறதே தவிர மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய எந்தவித திட்டங்களும் தமிழ்நாட்டில் நடந்ததாக தெரியவில்லை. அடுத்த தேர்தலை நோக்கிதான் அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. மக்களை பற்றி சிந்திக்கவில்லை. என்ன நடந்தாலும் முதலில் அதிகாரிகளைத்தான் மாற்றுகின்றனர். அதிகாரிகளை மாற்றினால் மட்டும் போன உயிர் வந்துவிடுமா?” என்று கூறினார்.