சட்டமன்ற தேர்தலை பிரசாந்த் கிஷோருடன் இணைந்து தி.மு.க. சந்திக்கும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இதுபற்றி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், வருகிற 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை இந்தியன் பி.ஏ.சி. (இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி) அமைப்புடன் இணைந்து தி.மு.க. சந்திக்க உள்ளது என தெரிவித்து உள்ளார்.
அவரது இந்த பதிவுக்கு, இந்த வாய்ப்பினை வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி என அந்த அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2021 தேர்தலில் வெற்றி பெற உதவுவதற்காக, தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுடைய தமிழக அணி ஆர்வமுடன் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.
திமுகவுடன் இணைந்து பிரசாந்த் கிஷோர் பணியாற்றுவார் என்ற அறிவிப்பு வெளியானவுடன் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் பதிவிடப்படுகின்றன. இரண்டு முறை அதிமுக தொடர்ந்து ஆட்சியில் இருக்கிறது. இந்த அதிமுக ஆட்சி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், திமுக எளிதாகவே அடுத்த முறை ஆட்சிக்கு வந்துவிட முடியும். அப்படியிருக்கும்போது இன்னொருவரின் துணை தேவையா என்ற ரீதியில் விமர்சனங்கள் பதிவிடப்படுகின்றன.
கடந்த 2016 தேர்தலின்போது ஆலோசகராக சுனிலை நியமித்து நமக்கு நாமே பயணத்தை முன்னெடுத்தார் மு.க.ஸ்டாலின். அப்போது கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை அவருடன் நெருங்கி பேசுவதற்கு நமக்கு நாமே பயணத்திட்டம் வழிவகுத்தது.
அதேபோல் வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சியின் இளைஞரணித் தலைவர் உதயநிதியை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதற்காக பிரசாந்த் கிஷோர் திட்டம் வகுத்துக் கொடுப்பார் என்று கூறப்படுகிறது. கட்சியின் கடைசி தொண்டர்கள் வரை அவருடன் நெருங்கி பேசுவதற்கு திட்டம் வகுத்து கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் திமுக வெற்றி வாய்ப்பு குறைவாக உள்ள தொகுதிகளில் அதிக கூட்டம் போடுவது, ஸ்டாலின் மற்றும் உதயநிதி பிரச்சாரத்தை அதிகப்படுத்துவது போன்ற திட்டங்களையும் வகுத்து கொடுப்பாராம்.