விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து விருதுநகரில் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, “பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை 108 முறை மோடி அதிகரித்துள்ளார். அப்படி கூட்டியதால், அப்போது 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது 500ரூபாயாக இருந்த கேஸ் விலை, தற்போது 1000 ரூபாயாகிவிட்டது. இப்படி மக்களிடம் வசூலித்த பணம் 7.75 லட்சம் கோடி. அந்தப் பணத்தை வைத்து சாமானியர்களுக்கு கடன் கொடுக்காமல், பணக்காரத் தொழிலதிபர்களுக்கு 10ஆயிரம் கோடி, 12 ஆயிரம் கோடி எனக் கடன் கொடுத்து, அவர்கள் அனைவரும் கடனைத் திருப்பி அடைக்காமல் வெளிநாட்டில் ஜாலியாக வாழ்கிறார்கள்.
அவர்களை பாஜக அரசு கண்டுகொள்ளாமல், ரூபாய் 10 ஆயிரம் கோடி கடனை தள்ளுபடி செய்தது. மோடி அரசு பணக்காரர்களுக்கான அரசு. விவசாயிகள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனைத் தள்ளுபடி செய்யவில்லை. எல்.ஐ.சி. உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தார்கள். எப்போதும் ஏழைகளுக்கு எதிராகவே நடக்கும் ஆட்சிதான் மோடியின் ஆட்சி. அதன் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம். ஏழை, பணக்காரர் என அனைவருக்கும் வாக்கு சமமாக இருக்கிறது.
உங்களை யாரும் கட்டாயப்படுத்தியோ, பணம் கொடுத்தோ வாக்கு செலுத்த வைக்க முடியாது. நீங்கள் யாருக்கு வாக்கு செலுத்தப்போகிறீர்கள் என்பது ரகசியமானது. சிறந்த பாதுகாப்போடுதான் வாக்கு செலுத்துவீர்கள். உங்களை ஆளுகின்ற அரசாங்கம் சரியாக இல்லை என்றால் உங்கள் வாக்கால் அதைத் தூக்கி எறியுங்கள்.” என்று பேசினார்.