கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மிக மோசமான தேர்தல் முறைகேடுகள் நடந்துள்ளதாக எடியூரப்பா குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக சட்டசபைத் தேர்தல் பல்வேறு திருப்பங்களுடன் நிறைவடைந்து, நாளை அம்மாநில முதல்வராக குமாரசாமி பதவியேற்க உள்ளார். இந்நிலையில், நேற்று விஜயபூரா மாவட்டம் மனகுலி கிராமத்தில் வி.வி.பி.ஏ.டி. எனப்படும் வாக்கு எந்திரத்துடன் தொடர்புடைய 8 எந்திரங்கள் கேட்பாரற்று கிடைத்துள்ளன.
சர்ச்சைக்குரிய விதத்தில் கைப்பற்றப்பட்ட இந்த எந்திரங்கள், விஜயபூரா மாவட்டத்தைச் சேர்ந்தவை இல்லை என்றும், அவை செயலற்ற நிலையில் கிடைத்ததாகவும் தேர்தல் அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர். தேர்தல் விதிமுறைகள் குறித்த குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக, இந்த இயந்திரங்களை இங்கு கொண்டுவந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதுகுறித்து, பா.ஜ.க. முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட எடியூரப்பா, தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், ‘விஜயபூரா மாவட்டம் மனகுலி கிராமத்தில் கேட்பாரற்றுக் கிடந்த வி.வி.பி.ஏ.டி. எந்திரங்கள் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பதாகவே நம் நம்புகிறேன். இதுபோன்ற எந்திரங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பது மிக மோசமான முறையில் தேர்தல் முறைகேடுகள் நடந்திருப்பதையே சுட்டிக்காட்டுகின்றன. இதுபோன்ற மோசடிகள் நடப்பதும், அதுகுறித்து புகாரளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதததும் இது முதல்முறை அல்ல. நாங்கள் பலமுறை புகார்கள் வழங்கியிருக்கிறோம். ஆனால், எல்லாமே வீணாகித்தான் போனது’ என எழுதியுள்ளார்.