தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் திருநாளைக் கொண்டாட தமிழக மக்களுக்கு 2,500 ரூபாய் பணமும் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு பொருட்களும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
அதன்படி இன்றுமுதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் ஒவ்வொரு குடும்ப அட்டைகளுக்குமான பொங்கல் பரிசு 2500 ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியாளர்கள் இன்று (04.01.2021) தொடங்கி வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்குப் பரிசுப் பொருட்களையும் 2500 ரூபாய் பணமும் வழங்கி, பொங்கல் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசு மற்றும் 2,500 ரூபாய் பணம் கொடுக்கும் நிகழ்ச்சியைச் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்டடோர் தொடங்கி வைத்தனர்.
திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 1,224 நியாயவிலைக் கடைகளும், 8 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளதாகவும், அவர்களுக்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டு அதில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு நியாயவிலைக் கடைகளில் 2500 ரூபாய் பணம் பெற்றுக்கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டு வழங்கப்பட்டது.
குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு வாங்குவதற்காக வந்து வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, சிந்தாமணி நியாயவிலைக் கடைகள் அதிமுகவின் கொடிகளும் வரவேற்பு கொடுப்பதற்காக கட்சிக்காரர்களும் சூழ்ந்து நின்றதால் ‘இது அரசு விழாவா அல்லது கட்சி நிகழ்ச்சியா’ என்று பொதுமக்கள் முணுமுணுத்துச் சென்றனர்.
மேலும் துறையூர் பெருமாள் மலை பகுதியில், இன்று துவங்க உள்ள அம்மா மினி கிளினிக் திறப்பு விழாவிற்கு, அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி கலந்துகொண்டு மினி கிளினிக்கைத் திறந்து வைத்தார்.
அரசின் திட்டமான மினி கிளினிக் அரசு அதிகாரிகளால் திறக்கப்பட வேண்டுமே தவிர, கட்சி உறுப்பினர்களால் திறக்கப்படுவது ‘இது அரசு விழாவா அல்லது கட்சி நிகழ்ச்சியா’ என்ற கேள்வியை பொதுமக்களிடையே எழுப்பியுள்ளது.
கிராமங்களில் உள்ள விவசாயப் பெருமக்களும் பிற தொழில் சார்ந்து இருக்கக்கூடிய ஒவ்வொரு பொதுமக்களும் முதலுதவி பெறுவதற்காக அரசின் மினி கிளினிக் தொடங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். முதல்வர் என்பவர் கட்சி சாராதவராகவும் அரசின் நலனில் அக்கறை உள்ளவராவுகம் செயல்பட வேண்டிய நிலையில், இதுபோன்று அரசு நிகழ்ச்சிகளைக் கட்சி நிகழ்ச்சிகளைப் போல நடத்த அனுமதிப்பது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது அதிமுக கட்சி சார்பில் திறக்கப்படும் கிளினிக்கா? அல்லது அரசின் திட்டமா என்ற சந்தேகம் தங்களுக்கு எழுந்துள்ளதாக கூறுகின்றனர்.