திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மிட்டாளம் ஊராட்சி, மதனாஞ்சேரி ஊராட்சி, பாலூர் ஊராட்சி உட்பட்ட கிராமங்களில் மினி கிளினிக் திறப்பு விழா நிகழ்ச்சி, டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்றது. இதில், தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் கபில் மற்றும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
இவர்கள் வருகையையொட்டி அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வினர் மாறி மாறி ஃப்ளக்ஸ் பேனர்கள் மற்றும் கட்சிக் கொடிகளைக் கட்டினர். மேலும், விழா மேடையில் அமைச்சருக்கும் - தி.மு.க., எம்.எல்.ஏவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சியைப் புறக்கணித்துச் சென்றுவிட்டார்.
நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் திரும்பிச் செல்லும்போது, வாணியம்பாடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பழனி செல்வத்திடம், தி.மு.க.வின் கொடிகள் மற்றும் பேனர்களை வைக்க, எப்படி அனுமதி கொடுத்தீர்கள்? நீங்கள் எப்படி ‘லா அண்ட் ஆர்டர்’ பிரச்சனையை எதிர் கொள்வீர்கள் என்று கேள்வி எழுப்பியவர், தி.மு.க.காரர்களை அடிச்சுத் தூக்கி உள்ளே போடுங்கள் என்று உத்தரவிட்ட வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இந்நிலையில், டிசம்பர் 20ஆம் தேதி, உரிய அனுமதியின்றி 3 ஊராட்சிகளில் பேனர்கள் வைத்ததாக கிராம நிர்வாக அலுவலர்கள் காவல் நிலையங்களில் கொடுத்த புகாரில் ஆம்பூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதன், தி.மு.க ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஞானவேலன் மற்றும் தி.மு.க மாதனூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ்குமார் உட்பட தி.மு.க.வினர் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், அ.தி.மு.க ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளர் செந்தில், மாதனூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஜோதி ராமலிங்கராஜா, மாதனூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் பொறியாளர் வெங்கடேசன் போன்றோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பேனர் அச்சிட்டுக் கொடுத்ததாக அச்சக உரிமையாளர்கள் மீதும் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அது எந்த அச்சகம் என விசாரணை நடத்தி வருகின்றனர்.