விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.
இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.
ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.
இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.” எனப் பேசினார்.