திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் வருகிற 24 ஆம் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் தொடர்பாக, அங்கு நடைபெற்று வரும் பணிகளை அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி, அமைப்பு செயலாளர் பி. தங்கமணி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர், காமராஜ் ஆகியோர் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.பி. முனுசாமி, “திருச்சி வண்ணாங்கோயில் பகுதியில் மார்ச் 24 ஆம் தேதி நடைபெறும் அதிமுக வேட்பாளர் அறிமுகம் மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். கோவையில் நடந்த பிரதமர் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டது குறித்து, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதா குறித்து பிரதமர் மோடி மேடைகள் தோறும் புகழ்ந்து பேசி வருகிறார். ஆனால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் மற்றும் அண்ணா உள்ளிட்டோரை அவதூறாகப் பேசி வருவதை பிரதமர் ஏன் கண்டிக்கவில்லை?
தமிழகத்தில் முக்கிய தொகுதிகளை கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்காமல், அதிமுக நேரடியாக களம் காண வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர். இருப்பினும் கூட்டணி கட்சிகளுக்கும் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. மத்திய அரசின் பிரதிநிதிகளை தேர்வு செய்யும் தேர்தல் இது. மேலும் தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கு எதிரான கருத்துக்களை கூறியும், தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தும் வாக்குகள் சேகரிப்போம். பா.ம.க. தற்போது பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளது. அதற்கான பலனை அனுபவிப்பார்கள். அதிமுக பலமுறை கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது. வரலாறும் அதுதான்.
அதிமுகவால் அறிமுகப்படுத்தப்பட்டவன் நான். ஜெயலலிதாதான் எனது தெய்வம், எந்த காலத்திலும் அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கமாட்டேன் எனக் கூறி வந்த ஓபிஎஸ், தற்போது இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை என்றதும், சின்னத்தை முடக்குங்கள் எனக் கூறுகிறார். இதிலிருந்து அவர் எத்தனை பெரிய சுயநலவாதி என்பது தெரிகிறது. தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி செய்த அதிமுக அசைக்க முடியாத பலம் கொண்டது. இது தேர்தல் முடிவில் தெரிய வரும்” என்றார்.