![DMK MP Kanimozhi starting her campaign at selam edappadi](http://image.nakkheeran.in/cdn/farfuture/3w_4rAzzFvpHednB7R3j_NgbN2M5_jSEpsgnBMl8Phg/1606568120/sites/default/files/inline-images/th-1_17.jpg)
'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' எனும் தலைப்பில், தேர்தல் பிரச்சாரத்தை இப்போது துவக்கிவிட்டது தி.மு.க. இந்தப் பிரச்சாரத்தை, தி.மு.க தலைவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் துவக்குவார்கள் என்றும், பிரச்சாரம் துவக்கும் தேதிகளையும் பிரச்சாரம் செய்யும் மாவட்டத்தையும் அறிவித்திருந்தது தி.மு.க தலைமை. அந்த வகையில், சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியிலிருந்து நாளை (29.11.2020) தனது பிரச்சாரத்தைத் துவக்குகிறார் தி.மு.க மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி.
சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட தி.மு.க.வை ஜெயிக்கவிடக் கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு வியூகம் அமைத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில், தனது பிரச்சாரத்தை முதல்வர் பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியிலிருந்து துவக்க விரும்புகிறேன் என தி.மு.க தலைமையிடம் கனிமொழி கேட்டுக் கொண்டிருந்தார். அதனை ஏற்றுக்கொண்ட தி.மு.க தலைமை, அதற்கேற்ப கனிமொழியின் பிரச்சாரப் பயணத்தை வகுத்துத் தந்தது. அந்த வகையில், முதல்வர் பழனிசாமியின் கோட்டை என அ.தி.மு.க.வினரால் வர்ணிக்கப்படும் எடப்பாடி தொகுதியிலிருந்து, பிரச்சாரத்தை துவக்க, சேலத்திற்கு கிளம்பிச் செல்கிறார் கனிமொழி. அவரது பிரச்சாரப் பயணம் வெற்றியடைய வாழ்த்தி பெப்சி முரளி, மெர்லின், சித்ரா உள்ளிட்ட கனிமொழியின் ஆதரவாளர்கள் அவரை சந்தித்து 'வீர வாள்' பரிசளித்தனர். ஆதரவாளர்களின் வாழ்த்துகளுடன் சேலம் புறப்பட்டிருக்கிறார் கனிமொழி.