ஏப்ரல் 18-ல் நடந்த இடைத்தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க.வினர் எப்படி வேலை செய்தார்கள் என்று கட்சியின் சீனியர்களை விசாரிக்கச் சொன்னார் எடப்பாடி. அதாவது, வாக்குப்பதிவுக்குப் பிந்தைய நிலைமை பற்றிய அறிக்கைனுகூட சொல்லலாம். அதாவது, எக்ஸிட் ரிப் போர்ட். அதன்படி தென் மாவட்ட அ.தி.மு.க.வினரின் பணிகள் குறித்து ஆராய்ந்த செங்கோட்டையன், சிவகங்கை தொகுதி நிலவரம் அறிந்து திகைத்துப் போய் விட்டார்.
அங்கே களமிறங்கிய அ.தி.மு.க.வினர், வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டியதை ஓரளவு சரியாகவே கொடுத்திருந்தாலும், இந்தப் பணத்துக்காக, எங்கள் கூட்டணி சார்பில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் ஹெச். ராஜாவுக்கு தயவுசெய்து ஓட்டுப் போட்டுடாதீங்க. அவர் ஜெயித்தால் தொகுதி நாஸ்தியாகிவிடும். அதோடு எப்போதுமே எங்கள் அ.தி.மு.க. இங்கே நிற்கமுடியாமல் போய்விடும். அதனால் வேறு யாருக்கு வேண்டுமானாலும் போடுங்கள். எங்கள் பங்காளி தினகரனின் பரிசுப் பெட்டிக்குப் போட்டாலும் பாதகமில்லேன்னு சொல்லி, வாக்காளர்களை திசை திருப்பி விட்டார்களாம் .
இதை அறிந்த செங்கோட்டையன், பல இடங்களில் நம் தொண்டர்களின் செயல்பாடு இப்படித்தான் இருக்குன்னு அந்த அறிக்கையில் சொல்லியிருக்கார். எம்.பி. தொகுதிகள் மட்டுமில்லாமல், இடைத் தேர்தல் நடந்த 18 தொகுதிகளிலும்கூட ஆளுந்தரப்பினர் அலட்சியம் காட்டியிருக்கிறதாகவும், தேர்தல் பணியில் இருந்த அரசு ஊழியர்களும் ஆட்சிக்கு எதிரான மனநிலையோடு ஆப்பு வச்சிருக்காங்கன்னும் எடப்பாடிக்கு பல தரப்பிலிருந்தும் ரிப்போர்ட் வந்திருக்குதாம்.இதனால் அதிர்ச்சியடைந்த எடப்பாடி அடுத்த கட்ட நடவடிக்கை என்ன எடுக்கலாம் என்று தனக்கு நம்பிக்கைக்கு உரிய அமைச்சர்களிடம் ஆலோசனையில் இருக்கிறார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.