பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாட்டில் தமிழ் மொழி அழிந்து கொண்டு வருவது வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். ராமதாஸ் - சரஸ்வதி தம்பதியினரின் முத்து விழா நிகழ்ச்சி புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழ் மொழியில் இல்லை என கூறினார். மேலும், நாம் வாழும் தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்று நினைக்கும் போது நெஞ்சமெல்லாம் பதறுகிறது. அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, எட்டுத்தொகை ஆகியவற்றை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தமிழ் உணர்வு இருக்கிறது" என ராமதாஸ் தெரிவித்தார். மேலும், அமெரிக்காவில் உள்ள தமிழர்கள், தமிழ் மொழி குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகத்தில் தமிழ் அழிந்துகொண்டு வருவது, வருத்தம் அளிப்பதாகவும், ராமதாஸ் தெரிவித்தார்.