திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தனித் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் திமுகவை சேர்ந்த மு.பெ.கிரி. நடைபெறவுள்ள 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு கட்சியிடம் மனு தந்துள்ளார். இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான நேர்காணலும் நடந்து முடிந்துள்ளது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் 'செங்கத்தின் நிரந்தர எம்.எல்.ஏவுக்கு வாக்களிப்பீர்', 'செங்கம் தொகுதி வேட்பாளர்', 'திமுகவின் வெற்றி வேட்பாளர்' என மு.பெ.கிரியின் பெயர், படங்கள் போட்டு சமூக திமுகவை சேர்ந்த சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அதே சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பியுள்ள திமுகவினர் சிலர், கட்சி தலைமைதான் வேட்பாளர்களை அறிவிக்கும், இன்னும் வேட்பாளரே அறிவிக்காத நிலையில் இவர் தான் வேட்பாளர், இவருக்கு வாக்களியுங்கள் என எப்படிப் பிரச்சாரம் செய்யலாம். இவர்களே வேட்பாளர்களை அறிவிப்பதற்கு கட்சித் தலைவர், தலைமை, மா.செ எல்லாம் எதற்கு எனக் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இது செங்கம் தொகுதி திமுகவிலும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது சமூக வலைதளங்களில் பரபரப்பாகவுள்ளது.
கிரி கட்சி நிர்வாகிகளை ஒருமையிலும், கொச்சைப்படுத்தியும் பேசினார் என ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி, மாவட்ட திமுக அலுவலகத்தில் அழைத்துப் பேசி சமாதானப்படுத்தினார்கள். கிரியும் வருத்தம் தெரிவித்து ஆடியோ வெளியிட்டபின் அந்த விவகாரம் அமுங்கியது. இந்நிலையில், கிரி ஆதரவாளர்கள், வேட்பாளர்களே இன்னும் அறிவிக்காத நிலையில் நிரந்தர எம்.எல்.ஏ. எனப் பிரச்சாரம் செய்து வாக்குக் கேட்டது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து எம்.எல்.ஏ கிரியின் ஆதரவாளர்களிடம் பேசியபோது, ஆர்வமிகுதியால் சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள். இதற்கும் எம்.எல்.ஏவுக்கும் எந்தச் சம்மந்தமுமில்லை. சாதாரண இந்த விவகாரத்தை உட்கட்சியில் இருப்பவர்கள் எழுப்ப காரணம், சீட் கேட்டவர்களுக்குக் கிடைக்காது எனத் தெரிந்தவுடன் இந்த விவகாரத்தைப் பெரிதாக்க முயற்சிக்கிறார்கள். இதற்குப் பின்னணியில் யார், யார் இருக்கிறார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும் என்கிறார்கள்.