
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் 252 கோடி மதிப்பிலான 74 பணிகளை துவக்கி வைத்தும் 33 கோடி மதிப்பிலான 57 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அரியலூர் மாவட்டம் கொல்லாப்புரத்தில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் 10 கோடி மதிப்பீட்டில் தொல்லுயிர் புதைபடிமப் பூங்கா அமைக்கப்படும்.
பல நாடுகளை கடல் கடந்து சென்று வென்றதோடு சீனா போன்ற நாடுகளுடன் வாணிபம் செய்த ராசேந்திர சோழனின் பெருமையை போற்றும் வகையில் கடல் வணிகம் போன்றவற்றில் தமிழர்கள் சிறந்து விளங்கியதை உலகிற்கு பறைசாற்ற கங்கைகொண்டசோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் பின்தங்கியுள்ள மாவட்டங்களே இருக்கக்கூடாது. ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம். மத்திய அரசிடம் இருந்து தமிழக உரிமைகளை காக்க அனைத்தையும் செய்துள்ளோம்.
ஒரு ஆட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு கடந்த கால ஆட்சி. பத்தாண்டு காலத்தை நாசமாக்கியவர்கள், இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்து புகார் கொடுக்கிறார்கள். அதைப் பார்த்து மக்கள் சிரிக்கிறார்கள்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா எனச் சிலர் சதி செய்கிறார்கள். சட்டம் ஒழுங்கு கெடவில்லை எனச் சிலர் வருத்தப்படுகிறார்கள். மக்களுக்கு இந்த ஆட்சியில் எந்த ஆபத்தும் இல்லை” எனக் கூறினார்.