தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு,தேர்தல் அறிக்கை என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இத்தகைய அரசியல் சூழ்நிலையில் இன்று கன்னியாகுமரி வந்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. முன்னதாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் வந்த அமைச்சர் அமித்ஷா, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதனால் அந்த கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆலய வழிபாட்டுக்கு பிறகு ஆலயத்திற்கு அருகில் உள்ள ரதவீதியில் அமித்ஷா பாஜக நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் மக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்தார். அவருடன் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் இடைத்தேர்தலில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.
இதன் பிறகு நாகர்கோவிலில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பூர்ணகும்ப மரியாதை ஏற்றுக்கொள்ள இருக்கிறார். அதேபோல் பாஜக சார்பில் 'ரோட் ஷோ'வில் வாகன பிரச்சார நிகழ்ச்சியிலும் பங்கேற்க இருக்கிறார் அமித்ஷா.