![AIADMK issue; High Court sitting even on holidays](http://image.nakkheeran.in/cdn/farfuture/dQi-1IvENK8ZhvVPVLEIcwsYMCsGYUHsxsH2Rqg22t8/1679462914/sites/default/files/inline-images/253_19.jpg)
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, சனிக்கிழமை இ.பி.எஸ். மனுத்தாக்கல் செய்தார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனச் சொல்லப்பட்டது. இந்நிலையில், ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.வைத்திலிங்கம் ஆகிய மூன்று பேர் சார்பிலும் தனித்தனியாக முறையீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, பொறுப்பு நீதிபதி இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் முன்னிலையில் முறையீடு செய்யப்பட்டது. அதனையேற்ற நீதிபதி குமரேஷ் பாபு இதை அவசர வழக்காக ஏற்று விசாரிப்பதாகத் தெரிவித்தார். முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தேதியை இ.பி.எஸ். அறிவித்து, முதல் ஆளாய் வேட்புமனுவைத் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன், ஓ.பி.எஸ். ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அதனைத் தொடர்ந்து ஓ.பி.எஸ்., ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக் காட்டி, அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை அறிவித்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்.
அதே சமயம், எடப்பாடி பழனிசாமி தனது அணியின் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். தரப்பு தாக்கல் செய்துள்ள வழக்கை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் ஞாயிறன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில், ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்காக மூத்த வழக்கறிஞர்கள் பி.எஸ்.ராமன், ஸ்ரீராம், மணிசங்கர் ஆகியோர் ஆஜராகினர். இ.பி.எஸ். தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வைத்தியநாதன் மற்றும் அதிமுக விஜயநாராயண் ஆகியோர் ஆஜராகினர்.
அதனைத் தொடர்ந்து மூன்று தரப்பினரும் நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை முன்வைத்தபிறகு நீதிபதி குமரேஷ் பாபு, “தீர்மானம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த என்ன அவசியம்? பொதுச்செயலாளர் தேர்தலை நிறுத்த விரும்பவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் தொடர்பான வழக்கு மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கை வரும் 22ம் தேதி விசாரிக்கிறேன். அன்று தெலுங்கு வருடப் பிறப்பின் காரணமாக நீதிமன்றத்திற்கு விடுமுறை தான் என்றாலும், உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியிடம் அனுமதி வாங்கி அன்று முழுவதும் வழக்கை விசாரித்து 24ம் தேதி தீர்ப்பு வழங்குகிறேன். அதுவரை தேர்தல் நடைமுறையான வேட்புமனுத் தாக்கல், பரிசீலனை உள்ளிட்டவற்றை தொடரலாம். ஆனால், முடிவுகளை வெளியிடக்கூடாது” என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் என தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஓபிஎஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் குருகிருஷ்ணகுமார் ஆஜராகி வாதம் செய்து வருகிறார். பொதுக்குழு தீர்மான வழக்கு இன்று விசாரிக்கப்பட்டு மார்ச் 24 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. மார்ச் 26 ஆம் தேதி பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் நிலையில் மார்ச் 24 ஆம் தேதி நீதிபதி குமரேஷ் பாபு தீர்ப்பளிக்கிறார்.