முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுகவினர் ஜெயலலிதாவின் நினைவிடம் உள்ள மெரினாவில் குவிந்து வருகின்றனர். தற்பொழுது ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரத்தில் அதிமுக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி எனப் பிரிந்து கிடக்கும் நிலையில் இரு தரப்பினரும் தனித்தனியே வந்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து சசிகலா அவரது ஆதரவாளர்களுடன் வந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நான் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த ஒரு எண்ணத்தில் தான் ஜெயலலிதாவும் செயல்பட்டார். அவர் வழிதான் என் வழி. எனக்குத் தனி வழி எல்லாம் கிடையாது. இப்பவும் மக்களுக்காகத்தான் குரல் கொடுக்கின்றேன்.
நதிகள் எத்தனை வழிகளில் வந்தாலும் தண்ணீர் மக்களுக்கு நல்லது செய்கிறது. அதேபோல் மிகவிரைவில் அனைவரும் ஒன்று சேருவோம். தமிழக மக்கள் மிகப் புத்திசாலிகள். அவர்களுக்குத் தெரியும் யார் துரோகம் செய்தார்கள் என்று. நாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 2024 தேர்தலில் நிச்சயமாக நாங்கள் நினைத்தபடி வெற்றி கிடைக்கும். பாஜகவும் ஒன்று சேர்ந்துதான். நிச்சயமாக வெற்றியை நோக்கிப் பயணிக்கிறோம். ஏனென்றால் மக்கள் எங்களுடன் இருக்கின்றனர்.
ஜெயலலிதா போல் தான் நானும் இருப்பேன். தமிழக மக்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்டுப் பெறத் தைரியமும் இருக்கிறது. தன்னம்பிக்கையும் இருக்கிறது. விலை போகாமல் தமிழகத்திற்காகச் செய்ய வேண்டும் என நினைத்தால் அனைத்தையும் சாதிக்கலாம்” என்றார்.