நல்லது செய்தாலும் மக்கள் தன்னை முட்டாள் ஆக்கிவிட்டதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா உருக்கமாக பேசியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த மே 12ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியடைந்தார். பதாமி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தாலும், அது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மிகப்பெரியது கிடையாது.
அதேசமயம, தனது மகன் யதீந்திராவை தான் முன்னர் போட்டியிட்டு வெற்றிபெற்ற வருணா தொகுதியில் போட்டியிட வைத்தார். அந்தத் தேர்தலில் யதீந்திரா 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதற்காக வருணா மக்களிடம் நன்றி கூறச் சென்றிருந்த சித்தராமையா, ‘நான் இங்கு 2008ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றிபெற்று எதிர்க்கட்சித் தலைவரானேன். 2013ஆம் ஆண்டு இதே தொகுதியில் வெற்றிபெற்று முதல்வராக போட்டியிட்டேன். என் மகனை வெற்றிபெற வைத்ததறு நன்றி’ என தெரிவித்தார்.
மேலும், கட்சி ஊழியர்கள் மத்தியில் பேசிய அவர், ‘நான் நாற்பது ஆண்டுகாலமாக அரசியலில் இருக்கிறேன். 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறேன். ஏழை மக்களுக்காகவே உழைத்தேன். அவர்களுக்காக இலவச அரிசி வழங்க அன்ன பாக்யா திட்டத்தைக் கொண்டுவந்தேன். ஏழை மக்களின் பசி போக்க இந்திரா கேண்டீன் திட்டம் அறிமுகம் செய்தேன். ஆனால், சாமுண்டீஸ்வரி மக்கள் சிறுசிறு காரணங்களுக்காக என்னை தோற்கடித்துவிட்டார்கள். இந்திராகாந்தி, அம்பேத்கர் போன்ற பெரிய தலைவர்களையே இந்த மக்கள் தோற்கடித்தவர்கள் தான்’ என விரக்தியுடன் பேசியுள்ளார்.