நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பா.ஜ.க. தேசியத் தலைமையகத்தில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவது குறித்தும், வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்பு அமைச்சரும் பா.ஜ.க. மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சா, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.