திமுக சார்பில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது பேசிய அவர், “இன்று திடீரென்று கொண்டு வந்து இந்தியைத் திணிக்க வேண்டும் என்று நினைத்தால் அதை ஒருகாலும் தமிழகம் அனுமதிக்காது. நான் ஒன்றை மட்டும் தெரிவிக்கிறேன். நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
அறிஞர் அண்ணா தமிழகத்தில் முதல்வராக வந்து இருமொழிக் கொள்கையை வகுத்த காரணத்தினால் தான் தமிழகத்தில் தமிழ் வாழ்ந்து கொண்டு இருக்கிறது. தமிழ் பேசும் மக்கள் இருக்கிறார்கள். அருகிலிருக்கும் பெங்களூரில் கூட சந்தையில் அனைவரும் இந்திதான் பேசுகிறார்கள். கன்னடம் மொழி அழிந்துவிட்டது. எல்லா மொழிகளும் இந்தியால் அழிந்துவிட்டது. தமிழகத்தில் தமிழ் வாழ்கிறது. இதைப் பொறுத்துக்கொள்ளாமல் இந்தியைத் திணிக்கிறார்கள்.
இது இன்று நேற்றல்ல. 1938ல் இருந்து நடக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கலைஞர் அரசியலுக்கு வந்ததே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தான். அன்று கொடுத்த எதிர்ப்புக் குரலை 93ம் வயது வரை இந்தியை எதிர்த்துக் கொண்டே வாழ்ந்து மறைந்தவர் கலைஞர்.
இந்தி படித்தால் வெளி மாநிலத்தில் தொடர்பு ஏற்படும் என வானதி சீனிவாசன் சொல்லுகிறார். திமுக ஆட்சியில் படித்து உலகத்திலேயே அதிகமாகச் சம்பளம் வாங்கும் சுந்தர் பிச்சை இந்தி தெரியாத தமிழன்.
அதிமுகவிலிருந்து பாதிப் பேர் திமுகவிற்கு வந்து விடுகிறார்கள். நான் கூட பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். அதிமுக என்பது பங்காளி. பாஜக தான் பகையாளி. எங்களுக்கு மட்டுமல்ல இனத்திற்கே பகையாளி. அதிமுகவிலிருந்து நிறையப் பேர் திமுகவிற்கு வருகின்றனர். இரண்டு மாதம் பொறுத்திருங்கள் எடப்பாடி பழனிசாமியே திமுகவிற்கு வரலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம் அரசியலில். ஆனால் அவரை சேர்க்கக்கூடாது. யாரை வேண்டுமானாலும் சேர்க்கலாம். எடப்பாடி பழனிசாமியை சேர்க்கக்கூடாது” எனக் கூறினார்.