வருகின்ற 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக - பாஜக இடையே கூட்டணி ஏற்படும் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு எடப்பாடி அணி என்றும் ஓபிஎஸ் அணி என்றும் இரு அணிகளாக பிரிந்து கிடக்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு தரப்பும் தங்களது இருப்பை நிரூபித்துக்கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான சி.வி.சண்முகம் ஆரம்பத்திலிருந்து பாஜக உடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதை எதிர்த்து வந்தார்.
இந்நிலையில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு வழங்காததோடு, வேலைவாய்ப்பு வழங்காததை கண்டித்து அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.வி.சண்முகம் பங்கேற்றுப் பேசுகையில், ''பிற மாநிலங்களில் நிலங்களைக் கையகப்படுத்திய மத்திய அரசு உரிய இழப்பீடு கொடுத்துவிட்டு தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும் இழப்பீடு கொடுக்காமல் வஞ்சிக்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - திமுக இடையே கூட்டணி ஏற்படும்'' என்றார்.