நேற்றோடு வேட்புமனுதாக்கல் முடிந்து இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்து வருகிறது. தூத்துக்குடியில் திமுக வேட்பாளராக கனிமொழியும், பாஜக வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜனும் நிற்கின்றனர்.

திமுக வேட்பாளர் கனிமொழி தாக்கல் செய்துள்ள சொத்து விவரத்தில், ரூ.21 கோடியே 16 இலட்சத்து 57 ஆயிரத்து 370 மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.8 கோடியே 92 இலட்சத்து 20 ஆயிரத்து 200 மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாகவும், வங்கிகளில் 1 கோடியே 92 இலட்சத்து 90 ஆயிரத்து 928 ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது தாய் ராஜாத்தி அம்மாள் பெயரில் ரூ.1கோடியே 27 இலட்சத்து 48 ஆயிரத்து 413 மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரத்தில், ரூ.1 கோடியே 50 இலட்சத்து 07 ஆயிரத்து 600 மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.50 இலட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாகவும், தனது கணவர் சவுந்திரராஜன் பெயரில் 2 கோடியே 11 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.1 இலட்சத்து 87 ஆயிரம் அளவிற்கு கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.