ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஏறத்தாழ 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த முடிவுதான் என்று சொன்னாலும் மக்கள் நம்பிக்கை எந்த அளவிற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மீதும் அவர் கொண்டு வரும் திட்டங்கள் மீதும் இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. எப்போது முதலமைச்சர் இவர்தான் வேட்பாளர் என அறிவித்தாரோ எங்களைப் பொறுத்தவரை அவர் அன்றே சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டார். திருமகன் விட்டுச் சென்ற பணியை மக்களுக்கு மீண்டும் செய்வது தான் நாங்கள் மக்களுக்கு செய்யும் நன்றியாக இருக்கும். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை தேர்தல் முடிவாக வெளிப்பட்டுள்ளது. அதற்கு மக்களுக்கு மீண்டும் நன்றி.
தேர்தல் நேரத்தில் சர்ச்சைகள் வந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வந்தார்கள். நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதையும் என்ன செய்தோம் என்பதையும் சொல்லி வாக்குகளை கேட்டோம். அவர்கள் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி வாக்கு கேட்டார்கள். தேர்தல் முடிவுகளின் மூலம் யார் உண்மையை சொன்னார்கள் என்பதையும் யார் பொய் சொன்னார்கள் என்பதையும் கணிக்க முடிகிறது.” எனக் கூறினார்.