

அதிமுக மற்றும் தேமுதிகவில் இருந்து விலகிய 100 பேர் திமுக மாநில துணைப்பொதுச்செயலாளர் இ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் செட்டியபட்டியை சேர்ந்த அதிமுக மற்றும் தேமுதிக கட்சியை சேர்ந்த 100 பேர் திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான இ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
செட்டியபட்டி ஊராட்சியை சேர்ந்த ஊர் முக்கிய பிரமுகர் துரைசாமி தலைமையில் திமுகவில் இணைந்த அனைவருக்கும் இ.பெரியசாமி திமுக ஆடை அணிவித்து வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் முருகேசன், மாவட்ட பிரதிநிதி செட்டியபட்டி பவுன்ராஜ், மாவட்ட தொண்டரணி துணைஅமைப்பாளர் விடுதலை முருகன், ஒன்றிய விவசாய அணி துணைஅமைப்பாளர் ஆர்.ரெங்கசாமி மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியை சேர்ந்த இளைஞர்கள் கூறுகையில், கரோனா ஊரடங்கு காலத்தில் ஆளுங்கட்சியை சேர்ந்த யாரும் பொதுமக்களுக்கோ, ஏழை எளிய மக்களுக்கோ உதவ முன்வரவில்லை. எதிர்கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான இ.பெரியசாமிதான் தொகுதி முழுவதும் அனைத்து மக்களுக்கும் வீடு தவறாமல் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் அதிமுக ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்பதே இல்லை. திமுக ஆட்சியில் அமர்ந்தால்தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பதால் நாங்கள் இ.பெரியசாமி முன்னிலையில் திமுகவில் இணைந்தோம் என்றனர்.