அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பது தொடர்பான விவாதங்கள் எழுந்திருக்கும் நிலையில், இன்று முன்னாள் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''மாவட்ட கழக செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் கிட்டத்தட்ட மிகப் பெரும்பான்மையோர் ஒற்றைத் தலைமை தேவை என்கின்ற கொள்கை முடிவு பேசப்பட்டது, விவாதிக்கப்பட்டது, கருத்து தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் நடைபெற இருக்கிற பொதுக்குழுவில் அதற்கான முடிவு தெரியவரும். என்னுடைய ஆதரவு யாருக்கு, மற்றவர்களுடைய ஆதரவு யாருக்கு என்றெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது. காரணம் இது ஒரு உட்கட்சி பிரச்சனை. இந்த உட்கட்சிப் பிரச்சனையை கழகத்தினுடைய சட்ட விதிகளின்படி கட்சி அலுவலகத்தில், பொதுக்குழுவில் தான் பேச முடியுமே தவிர அதனை விவாதிக்கக் கூடிய இடம் இது அல்ல என்பது என்னுடைய கருத்து. உங்களுக்கே நன்றாகத் தெரியுமே யாருக்கும் பெரும்பான்மை இருக்கிறது, யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்று. கடந்த காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார். அதற்குப் பிறகு பிளவு ஏற்பட்டது. அந்த பிளவில் பதினோரு உறுப்பினர்களுடன் ஓபிஎஸ் சென்று விட்டார். அந்த 11 உறுப்பினர்களோடு மீண்டும் ஓபிஎஸ் சேர்ந்தார். இதுதவிர அதற்கு முன் ஓபிஎஸ் முதல்வராக இருந்தார் என்பதை மறந்து விடக்கூடாது. ஓபிஎஸ் எப்பொழுதுமே சமாதானத்தை விரும்புகிறவர் தான், ஏற்றுக் கொள்பவர் தான்'' என்றார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் 'பொதுக்குழுவை தடைசெய்யக்கோரி ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடர இருப்பதாக சொல்கிறார்களே?' எனக் கேட்க, அதற்கு பதிலளித்த ஓ.எஸ்.மணியன், ''எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றதற்குப் பின்னால் தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்திலும் ஒன்றுவிடாமல் எடப்பாடி பழனிசாமி தான் வெற்றி பெற்றார். வழக்கு போட்டவர்களுக்கு தோல்வியே பரிசாக அளிக்கப்பட்டிருக்கிறது. அதுவே தொடரும். பொதுக்குழு கண்டிப்பாக நடக்கும்'' என்றார்.