கடந்த வருடம் ஜூன் 22 ஆம் தேதி அதிமுகவின் அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையில், அவர் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் முதல்முறையாக நேற்று (26.12.2023) அதிமுக பொதுக்குழு கூடியது. அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்களை இபிஎஸ் முன்மொழிய, கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார்.
அதே சமயம் கோவையில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பூத் கமிட்டி அமைப்பதற்கான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். ஓபிஎஸ்-இன் ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது ஓ. பன்னீர்செல்வம் பேசுகையில், “அதிமுக ஆட்சியில் இருந்தபோது எடப்பாடி பழனிசாமி நாலரை ஆண்டுகாலத்தில் என்னென்ன செய்தார் என்று எனக்கு தெரியும். கோப்புகள் அனைத்தும் என்னிடம் வந்துதான் எடப்பாடி பழனிசாமியிடம் செல்லும். அதில் உள்ள ரகசியங்களை நான் அவிழ்த்துவிட்டால் எடப்பாடி பழனிசாமி திகார் சிறைக்குத்தான் செல்ல வேண்டும்” எனப் பேசி இருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கோவை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஓ. பன்னீர்செல்வம் ரகசியங்களை சொல்ல வேண்டும் என்று பகிரங்கமாக சொல்கிறேன். அவர் சொல்வது போன்று ஏதாவது ரகசியம் இருந்தால் திமுகவினர் விடுவார்களா. திமுகவின் பி டீம் அப்படித்தான் பேசுவார்கள். வேறு வழியே இல்லை ஓ. பன்னீர்செல்வம் சிறைக்கு செல்வது உறுதியாகிவிட்டது” எனத் தெரிவித்தார்.