கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.முக. நிர்வாகி வைரமுத்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கு ஓபிஎஸ் ஈபிஎஸ் தரப்பு வேண்டிய பதில்களைக் கொடுத்தது. தொடர்ந்த விசாரணையில், “ஓபிஎஸ் கட்சியின் கோட்பாடுகளுக்கு மாறாக எதிர்க்கட்சியான திமுகவிற்கு ஆதரவாகச் செயல்படுகிறார்” என ஈபிஎஸ் தரப்பு குற்றம் சாட்டியது.
இதற்கு மறுமொழி கூறிய நீதிபதிகள், “யாருக்கு யார் ஆதரவளிக்கிறார்கள் என்பதை நாங்கள் கருத்தில் கொள்ளத் தேவையில்லை. யாருக்கு ஆதரவளிப்பது என்பது அவரவர் விருப்பம்” எனக் கூறினர்.
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில், “பொதுக்குழு செயற்குழு கூட்டத்தை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் என் அனுமதி இல்லாமலேயே கூட்டியுள்ளனர். மேலும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்குப் பின் முந்தைய பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்தையும் நிராகரித்து புதிய அவைத் தலைவரைத் தேர்ந்தெடுத்து அடுத்த பொதுக்குழு செயற்குழுவிற்குத் தேதியை அறிவித்தனர்” எனக் குற்றம் சாட்டினர்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், “ஜூலை 11 பொதுக்குழுவிற்குப் பின் தான் அனைத்தும் மாறியது. நீங்கள் எதிர்பார்ப்பது என்ன” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதில் அளித்த ஓபிஎஸ் தரப்பு, “ஜூலை 11க்கு முன் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று இருந்த நிலை மீண்டும் வேண்டும். ஜூலை மாதம் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறினர்.
இதனை அடுத்து, “அதிமுக பொதுக்குழு விசாரணையை இந்த வாரமே முடிக்க விரும்புவதாகவும் இரு தரப்பு வழக்கறிஞர்களும் ஏற்கனவே முன்வைத்த வாதங்களை மீண்டும் எடுத்து வைக்கக்கூடாது. வழக்கின் விசாரணையை நாளை (ஜன 5) ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதிமுக வழக்கு நளை பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது.