வரும் 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூடவுள்ள நிலையில், அதிமுக வட்டாரத்தில் ஒற்றைத்தலைமை கோரிக்கை வலுத்துவருகிறது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதிய நிலையில், பொதுக்குழுவை நடத்தும் முடிவில் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவு தரப்பினர் எட்டாவது நாளாக இன்றும் தனித்தனியே ஆலோசனை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், நேற்றுவரை ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாடு எடுத்திருந்த நெல்லை மாவட்டச் செயலாளர் தச்சை கணேச ராஜாவும், விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரனும் தற்போது எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், ”எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றால்தான் கட்சி வலிவோடும் பொலிவோடும் திகழும் என்பது ஒட்டுமொத்த தொண்டர்களின் எண்ணமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டம் நெருங்கும் நேரத்தில் இரண்டு மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி தரப்பினர் பக்கம் தாவியிருப்பது ஓபிஎஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.