இந்தத் தேர்தல் களத்தில், கூலி கொடுத்து ஆட்களைச் சேர்த்து, பிரச்சார பிரசங்கத்தைக் காது வலிக்கக் கேட்க வைத்து, அரசியல் தலைவர்கள் பண்ணும் அலப்பறை, ஜனநாயத்தின் கேலிக்கூத்தாக உள்ளது. அதே நேரத்தில், ஓட்டு கேட்டு தன் வீட்டு வாசலுக்கே வரும் வேட்பாளர்களுக்கு, ஒரு இந்தியக் குடிமகன் எந்த அளவுக்கு மரியாதை தருகிறானென்றால், தலைப்பிலேயே சொல்லிவிட்டோமே.. ‘ஸ்டைலா.. கெத்தா..’ என்று.
ஆம், சிவகாசியில் ஆளும்கட்சியின் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் லட்சுமி கணேசன், திருத்தங்கல் அதிமுக நகரச் செயலாளர் பொன்.சக்திவேல் உள்ளிட்ட கட்சியினரோடு, அந்த வீதியில் வாக்கு கேட்டு வரும்போது, வாக்காளர்கள் இருவரின் முகம் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டனர். அந்த வாக்காளப் பெருமக்களோ, பதிலுக்கு கையெடுத்துக் கும்பிடவில்லை. அந்தப் பெண் வாக்காளருக்கோ சிரிப்பு வருகிறது. இளைஞரான ஆண் வாக்காளரோ, புகைப்படம் எடுப்பவரை மட்டுமே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்.
இத்தனைக்கும், லட்சுமி கணேசனும் பொன். சக்திவேலும் திருத்தங்கல் நகர்மன்றத் தலைவராகவும், துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்கள். அவர்களுக்குப் பதில் மரியாதை செலுத்துவதற்குக் கூட அந்த வாக்காளர்களுக்கு மனம் வரவில்லை என்றால், என்ன சொல்வது?. ‘எத்தனை கட்சிகள்? எத்தனை வேட்பாளர்கள்? பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக அவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள், கும்பிடுகிறார்கள். நாங்கள் ஏன் கும்பிட வேண்டும்? ஒவ்வொருவராக வருவார்கள்.. ஒவ்வொருத்தரையும் கும்பிட்டபடியே இருக்க முடியுமா? எங்களுக்கு வேற வேலையா இல்லை?’ என்று மனதுக்குள் நினைத்தபடி, வேட்பாளர்களை வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள் வாக்காளர்கள். ‘யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கும் ஒரு காலம் வரும்!’ என்று முன்னோர்கள் சும்மாவா சொன்னார்கள்?