பழனி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவும் ஓ.பி.எஸ் ஆதரவாளருமான சுப்புரத்தினத்தின் மகள் நிச்சயதார்த்த விழா இன்று பழனியில் நடைபெற்றது. இந்த விழாவில் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். அதில், சசிகலாவும், ஓபிஎஸ், டி.டி.வி.தினகரன் ஆகிய மூவரும் பாரதிய ஜனதாவின் அடிமைகள் ஆகிவிட்டனர் என புகழேந்தி சொல்கிறார்? என்ற கேள்விக்கு, “புகழேந்தி ரொம்ப நல்ல மனுஷன்” என்று பதிலளித்தார். ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, “ஈரோடு இடைத்தேர்தலை நாங்கள் புறக்கணிக்கவில்லை வாக்களிப்போம்; ஆனால் யாருக்கு என்பது ரகசியம்” என்றார்.
சசிகலாவும் நீங்களும் அண்ணா திமுக ஒன்றிணைப்பதில் பணியில் ஈடுபட்டு வருகிறீர்களே, ஒன்றிணைப்பதில் இன்னும் எவ்வளவு காலங்கள் ஆகும்? என்ற கேள்விக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக வளர்த்து எடுக்கப்பட்டது. இன்றைக்கு அண்ணா திமுகவில் இருக்கக்கூடிய சக்திகள் பிரிந்து கிடக்கிறது. அனைத்து சக்திகளும் இணைந்தால் தான் எதிர்காலத்தில் எந்த தேர்தல் வந்தாலும் வெற்றிபெற முடியும் என்ற சூழல் இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிலளித்தார்.
ஈரோடு இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடாமல் பின்வாங்கியதற்கு உங்களுடைய கருத்து என்ன? என்ற கேள்விக்கு, “ஏற்கனவே நான் சொல்லி இருக்கிறேன். இது குறித்து நான் நிறைய விளக்கங்கள் சொல்லி இருக்கிறேன். இன்று நடைபெறுகின்ற ஆட்சியினுடைய எதர்ச்சியாகவும், அதிகார துஷ்பிரயோகங்கள் இவை எல்லாம் அந்தத் தேர்தலில் நடைபெறுவதையொட்டி நாங்கள் தேர்தலில் வேட்பாளரை நிறுத்தவில்லை” என்றார்.
அண்ணா திமுகவை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறீர்கள்; ஒன்றிணைத்த பின்பு இபிஎஸ் அந்த ஒன்றிணைப்பு குழுவில் இடம் பெறுவாரா? என்ற கேள்விக்கு, ஓபிஎஸ் சிரித்தபடியே பதில் கூறாமல் மழுப்பினார்.
இடைத் தேர்தலில் வாக்களிப்போம் என்று கூறியுள்ளீர்கள்; அந்தத் தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் மட்டும் தான் போட்டி நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள்? என்ற கேள்விக்கு, இறுதிப்பட்டியல் வரட்டும் என்று கூறினார். இதில் மாவட்டம் மற்றும் நகர் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.