Skip to main content

ஓ.ராஜாவை வைத்து காய் நகர்த்தும் ஓ.பி.எஸ்?

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

Is O.P.S. moving political steps with O.Raja?

 

பெரியகுளம் அருகே உள்ள பண்ணை வீட்டில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ். நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததற்கு ஓ.பி.எஸ். பச்சைக்கொடி காட்டினார்.

 

இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் உதயகுமாரும் ஓ.பி.எஸ்.சை பண்ணை வீட்டில் சந்தித்து, இருவரும் இரண்டு மணி நேரம் ஆலோசனை செய்தனர். அதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், செல்வராஜ் ஆகியோர் ஓ.பி.எஸ்.சை சந்திக்கப் பண்ணை வீட்டுக்கு வரப் போவதாக அதிமுகவினர் மத்தியிலேயே ஒரு பேச்சும் அடிபட்டு வந்தும்கூட இருவரும் ஓ.பி.எஸ். சந்திக்க வரவில்லை. ஆனால், மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ். பண்ணை வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு முன்பாகவே மாவட்டச் செயலாளர் சையது கான், துணைச் செயலாளர் ராமர், முன்னாள் எம்.பி. பார்த்திபன் ஆகியோரை ஓ.பி.எஸ். தனியாக அழைத்து சசிகலாவையும், டி.டி.வி.யையும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று குரல் கொடுக்க வேண்டும் என்று கூறி பச்சைக்கொடி காட்டச் சொன்னார். அதேபோல் ராஜாவிடம், சசிகலாவை பார்க்கச் சொல்லி ஓ.பி.எஸ். தான் சொல்லியிருக்கிறார் என்று கட்சிக்காரர்கள் மத்தியிலேயே பேச்சு அடிபட்டு வந்தது. அதன் அடிப்படையில்தான் ஓ.ராஜாவும் திருச்செந்தூர் சென்று சசிகலாவைச் சந்தித்துப் பேசினார். இந்த விஷயம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தவும், கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி ஓ.ராஜா மற்றும் அவருடன் சென்ற தேனி நகரச் செயலாளர் முருகேசன் உட்பட ஆறு பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.சின் அறிக்கை வெளியானது. அதுபோல் ஏற்கனவே கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாகவும் ஆளுங்கட்சிக்கு மறைமுகமாகப் பொறுப்பாளர்களும் கவுன்சிலர்களும் செயல்பட்டார்கள் என்ற அடிப்படையிலும் 33 பேரைக் கட்சியிலிருந்து நீக்கி இருந்தனர். இந்த நிலையில், ஓ.ராஜாவையும் அதிரடியாக நீக்கியதைக் கண்டு அதிமுகவினரே அதிர்ச்சியடைந்து விட்டனர்.

 

Is O.P.S. moving political steps with O.Raja?

 

இது சம்பந்தமாகப் பெரியகுளத்தில் இருந்த ஓ.ராஜாவிடம் கேட்ட போது, “சசிகலாவைச் சந்தித்து கட்சிக்குத் தலைமை தாங்க வேண்டும் எனக் கேட்டேன். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்விக்கு ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தான் காரணம். நான் எதிர்க்கட்சி தலைவரைச் சந்திக்கவில்லை. இவர்கள் யார் என்னைக் கட்சியிருந்து நீக்க, நான் ஜெயலலிதா காலத்திலிருந்து கட்சியில் இருக்கிறேன். சசிகலாவால் தான் இந்தக் கட்சியைக் காப்பாற்ற முடியும். என்னை நீக்கியதாக வெளியான அறிக்கை செல்லாது. திருச்செந்தூரில் சசிகலாவைச் சந்தித்து அரைமணி நேரம் பேசினேன். அவர்கள் எல்லோரும் சேர்ந்து தான் செயல்பட வேண்டும் எனக் கூறி வருகிறார். அதுபோல் சசிகலாவைச் சந்தித்தது என் அண்ணனுக்கும் தெரியாது அதிமுக இரட்டை தலைமையின் செயல்பாடுகள் குறித்து அனைவருக்கும் தெரியும். அதனால் தான் அனைத்து இடங்களிலும் அதிமுக தோல்வியடைந்துள்ளது. நான் எப்போதும் சசிகலா தான் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்ற ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளேன். அதிமுகவினர் தற்போது பல கோஷ்டிகளாக உள்ளனர். ஒரு கட்டுப்பாடும் கிடையாது. ஒவ்வொருவரும் எதிர் எதிராகப் பேட்டிகளை மட்டுமே கொடுக்கின்றனர். டிடிவி தினகரன் அதிமுகவுக்காக உழைத்தவர். சசிகலா தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்பதால் அவர் யாரை வேண்டும் என்றாலும் சேர்க்கலாம். அதிமுகவுக்கு சசிகலா தலைமையை ஓபிஸ், இபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் கவலை இல்லை. கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் தொடர்ந்து நீக்கம் செய்வது நல்லதாக இல்லை. கட்சியே சசிகலா வசம் வரப்போவதால் கட்சியினர் நீக்கப்படுவது குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை. அவர்களை மீண்டும் இணைக்க வேண்டியது இல்லை. அதிமுகவின் தொடர் தோல்விகளை வைத்தே கட்சித் தலைமையின் செயல்பாடுகளை எவ்வாறு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். சசிகலா வரவேண்டும் என்பதையே அனைவரும் விரும்புகிறார்கள். கட்சியில் 2 சதவிகிதம் மட்டுமே எதிர்ப்பு உள்ளது. அந்த இரண்டு சதவிகிதம் இவர்கள் தான். சசிகலா அதிமுகவில் இணைப்பு குறித்து பேசுகிறார்கள். அவர் ஏற்கெனவே அதிமுக வில் தான் உள்ளார். பின்னர் எதற்கு இணைப்பு குறித்து பேச வேண்டும். தற்போதும்கூட அவர் அதிமுக கொடி கட்டிய காரில் தான் வருகிறார்” என்று கூறினார்.

 

Is O.P.S. moving political steps with O.Raja?

 

ஆனால், சசிகலா, டிடிவி கட்சியில் இணைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் மறைமுகமாக ஆதரவு கொடுத்து வருகிறார். அதற்குத் துணை போகும் கட்சிப் பொறுப்பாளர்களை மற்றொருபுறம் இபிஎஸ் கட்சியிலிருந்து ஓரங்கட்டி வருகிறார். அதோடு தன்னுடைய ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள், தங்கமணி, வேலுமணியையும் அனுப்பி ஓபிஎஸ்சை சமாதானப்படுத்தும் முயற்சியையும் எடப்பாடி எடுக்கவில்லை. அதுபோல் ஓபிஎஸ்-க்கு தெரியாமலேயே அவருடைய லெட்டர் பேடை இ.பி.எஸ்  பயன்படுத்திய அறிக்கை விட்டு வருவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். அதோடு ஓபிஎஸ்  சந்திக்க முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பலர் வருவார்கள் என்று ஓபிஎஸ் தினசரி பண்ணை வீட்டு முகாமிட்டு வருகிறார். ஆனால் உதயகுமாரைத் தவிர யாரும் ஓ.பி.எஸ்.சை பார்க்க ஆர்வம் காட்டவில்லை என்பதால் மனம் நொந்துபோய் வருகிறார். இருந்தாலும் ஓ.பி.எஸ்.சின் கருத்தைக் கேட்கக் கடந்த இரண்டு நாட்களாகப் பத்திரிகையாளர்கள் பண்ணை வீட்டில் முகாமிட்டு வருவதைக் கண்ட ஓ.பி.எஸ். எதுவானாலும் உங்களைக் கூப்பிட்டுச் சொல்கிறேன் நீங்க ஏன் இரவு பகல் பாராமல் இங்கே காத்துக் கிடக்கிறார்கள் உங்கள் பணிகளைப் போய் பாருங்கள் என்று கூறி வருகிறார். 

 

 

சார்ந்த செய்திகள்