அதிமுகவின் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து விவாதிக்க கடந்த 14ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்தான விவாதம் ஏற்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியே வந்து செய்தியாளர்களிடம் கூறினார். இதன் மூலம் அதிமுகவில் ஒற்றைத் தலைமை அரசியல் பரபரப்பை ஏற்படுத்திவந்தது. இதன் காரணமாக, ஓ.பி.எஸ். தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுக்குழு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதில், பொதுக்குழு கூட்டத்தில், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள தீர்மானங்களை தவிர்த்து வேறு தீர்மானங்களை நிறைவேற்றக் கூடாது என உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று வானகரத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு முதலில் மேடைக்கு வந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் வருகை தந்தபோது, அவருக்கு மரியாதை நிமித்தமாக வணக்கத்தையும் தெரிவிக்கவில்லை. அதேபோல், வரவேற்புரை ஆற்றிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று மட்டுமே தெரிவித்தார். அதன்பிறகு பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், இணை ஒருங்கிணைப்பாளர் என்று மட்டுமே தெரிவித்தார். முக்கியமாக இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பேசும்போது, இணை ஒருங்கிணைப்பாளர் என்று மட்டுமே பேசினார். இதனால், ஓ.பி.எஸ். முழுதாக ஒதுக்கப்படுவது பொதுக்குழுவில் வெளிப்படையாகவே தெரிந்தது.