நாடாளுமன்றத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளுடன் வருகிற 8-ந்தேதி டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி. அந்த ஆலோசனையில், கரோனாவை தடுப்பதில் மத்திய-மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், இனி என்ன மாதிரி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தும், தேசிய ஊரடங்கை தொடரலாமா ? வேண்டாமா ? என்பது பற்றியும் விவாதிக்கப்படவிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்காக, நாடாளுமன்றத்திலுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும், தேசிய அரசியலில் பங்கெடுத்துக்கொண்ட முன்னாள் மூத்த தலைவர்களுடனும் தற்போது தேசம் எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளை எதிர்கொள்வது குறித்தும் கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார் மோடி.
அந்த வகையில் தமிழகத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலிடனை தொடர்பு கொண்டு பேசிய மோடி, அதன் தொடர்ச்சியாக பாமக எம்.பி.யும் இளைஞரணி தலைவருமான டாக்டர் அன்புமணியிடம் பேசினார்.
அப்போது, அன்புமணி மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகியோரின் உடல்நலம் பற்றி விசாரித்தார் மோடி. மருத்துவர் ராமதாஸின் உடல் நலனை நன்றாக கவனித்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கிய அவர், தனது அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக் கொண்டார்.
அதைக் கேட்ட அன்புமணி, இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக துணிச்சலான நடவடிக்கைகளை அவர் எடுத்து வருவதாகவும், வலிமையான தலைமையின் கீழ் இந்தியா இயங்கி வருவதை பிரதமரின் நடவடிக்கைகள் உணர்த்துவதாகவும் பாராட்டினார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பா.ம.க. முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்திருக்கிறார் அன்புமணி.
அதைக்கேட்ட பிரதமர் மோடி, "ஒரு மருத்துவர் என்கிற முறையில் அரசின் நடவடிக்கைகளை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். கரோனா விஷயத்தில் தனது அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை நீங்கள் சொல்லலாம்" என்றார். அதனை உற்சாகமாக ஏற்றுக் கொண்ட அன்புமணி, "பாட்டாளி மக்கள் கட்சியின் யோசனைகளை எழுத்து வடிவில் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்" என உறுதியளித்திருக்கிறார்.