Skip to main content

“அ.தி.மு.க.வை கவிழ்க்க நினைத்த ஓ.பி.எஸ், தினகரன்..!” - திருமங்கலத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு

Published on 21/01/2021 | Edited on 21/01/2021

 

"OPS, Dinakaran who wanted to overthrow the AIADMK ..!" MK Stalin


மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ஆ.கொக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட செக்கானூரணியில் ‘அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “இன்னும் நான்கு மாதத்தில் பழனிசாமியின் ஆட்சியை முடிவுகட்ட வேண்டும் என்ற முடிவோடுதான் வந்துள்ளீர்கள். நான் ரெடி, நீங்க ரெடியா” என பேசினார். மேலும், “வரக்கூடிய தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வரப்போகிறது என்ற நம்பிக்கை இந்தக் கூட்டத்தைப் பார்த்தவுடன் பிறந்துள்ளது. 

 

திருவெறும்பூரில் பேசிய முதல்வரை, எடப்பாடி என சொல்ல மாட்டேன். அந்த ஊரைச் சொல்லி, பேரைச் சொன்னால் எங்களுக்கு கேவலமாக உள்ளது என ஊர் மக்கள் கேட்டுக் கொண்டதால் பழனிசாமி என்றே அழைப்பேன். தமிழக முதல்வர் பிரச்சாரத்தில், நேரடியாக ஓட்டுப் போட்டு எந்த முதல்வரும் தேர்வு செய்ய முடியாது என பேசியுள்ளார். யாருமே நேரடியாக முதல்வராக முடியாது. ஆனால், பழனிசாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பது அவருக்கே தெரியும். 

 

தி.மு.க.வை பொறுத்தவரை அ.தி.மு.க.வை கவிழ்க்க நினைக்கவில்லை. கொள்ளைப் புறமாக ஆட்சிக்கு வர நாங்கள் விரும்பவில்லை. மக்களைச் சந்தித்து ஆட்சிக்கு வரவே முடிவு எடுத்துள்ளோம். ஆனால், அ.தி.மு.க.வை கவிழ்க்க நினைத்தது அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும்தான்; நாங்கள் அல்ல. 2005ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்து கிடப்பில் போடப்பட்டது. மோடி அடிக்கல் நாட்டிய பிறகும் கிடப்பில்தான் உள்ளது. எய்ம்ஸ் வரவில்லை என்றால் ராஜினாமா செய்வோம் என அ.தி.மு.க. அமைச்சர் உதயக்குமார் தெரிவித்தார். ஆனால், தற்போது வரை எய்ம்ஸ் வரவில்லை; ராஜினாமா செய்தாரா? உதயக்குமார், ராஜினாமா செய்யத் தேவையில்லை. வரும் தேர்தலில் அவர், வீட்டுக்கு அனுப்பப்படுவார்” என்று பேசினார். 

 

இதனைத் தொடர்ந்து, திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் வராததால் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாள் வேலை திட்டமாக மாற்ற வேண்டும் என பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த ஸ்டாலின், “கால்வாய் சீரமைக்க ஏற்பாடு செய்யப்படும். 100 நாள் வேலை திட்டத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படுமென அறிவித்தவுடன், ஆளும் கட்சி அதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடியுள்ளது” என்றார்.

 

மேலும், “10 ஆண்டுகளாக ஜெயலலிதா ஆட்சியிலும், அதன் பின் பழனிச்சாமி பதவியேற்ற பின்பும் இந்த தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. திருமங்கலம் புதிய பேருந்து நிலையம், இரயில்வே மேம்பாலம், திருமங்கலம் பிரதான கால்வாய், மதுரை துணைக்கோள் நகரம் என எந்தத் திட்டமும் நிறைவேற்றவில்லை. இந்த தொகுதியின் அமைச்சர், ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டி வருகிறார். ஆனால், ஜெயலலிதா எப்படி மரணமடைந்தார் என்பதை இதுவரை யாரும் சொல்லவில்லை. நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் கிளப்பியது துணை முதல்வர்தான்; தி.மு.க. அல்ல.

 

ஜெயலலிதாவுக்கும் தி.மு.க.வுக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அவர், மருத்துவமனையில் இருந்தபோது சரியான தகவல் வெளியிடவில்லை. விசாரனை கமிஷன் 8 முறை அழைத்தும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் செல்லவில்லை. ஜெயலலிதா மரணத்தில் உண்மை நிலவரம் தி.மு.க. ஆட்சியில் வெளிக்கொண்டுவரப்படும். கரோனா காலத்தில்கூட கொள்ளை அடிக்கக் கூடிய ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. இந்த அ.தி.மு.க. ஆட்சியை நிராகரிப்போம்” என பேசினார்.

 

சார்ந்த செய்திகள்