Skip to main content

“இதனை அண்ணாமலைக்காக நான் சொல்லவில்லை” - ஜெயக்குமார் ஆதங்கம்

Published on 28/04/2023 | Edited on 28/04/2023

 

"I am not saying this for Annamalai" Jayakumar

 

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். சிவமோகா தமிழ்ச் சங்கம் புலம்பெயர்ந்த கன்னட தமிழர்கள் இடையே பிரபலமான தமிழ்ச் சங்கமாகத் திகழ்ந்து வருகிறது. இதனிடையே, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஆதரவைப் பெற சிவமோகா நகரில் தமிழர்களை வைத்து ஆதரவு பிரச்சாரக் கூட்டம் பாஜக கட்சி சார்பில் நேற்று நடத்தப்பட்டது. 

 

பாஜக மூத்த தலைவர் ஈஸ்வரப்பா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அங்கிருந்த தமிழர்கள் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிபெருக்கி மூலமாக இசைக்க வைத்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முன்னாள் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா உடனடியாக குறுக்கிட்டு, பாடிக்கொண்டிருந்த தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாதியில் நிறுத்த வைத்தார். பின்பு பெண்கள் யாராவது இங்கு வந்து கன்னட வாழ்த்துப் பாடலைப் பாடும்படி கூறினார். இதன் பின் ஒலிபெருக்கி மூலம் கன்னட வாழ்த்துப் பாடல் ஒலிபரப்பப்பட்டது.

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாகவும் தமிழ்த்தாயை இழிவுபடுத்தும் விதமாகவும் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்து என்பது என்ன? அதனை பாட வேண்டியது தானே? தமிழ்த்தாய் வாழ்த்தை பாதியில் நிறுத்தியது மிகவும் தவறு. இதை அண்ணாமலைக்காக நான் சொல்லவில்லை. எந்த ஒரு கூட்டமாக இருந்தாலும் சரி தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தால் அதை முழுவதுமாக பாட விட வேண்டும். அதன் பின்  அவர்களது மொழியில் பாடிக்கொள்ளலாம். ஆனால் பாடும்பொழுது நிச்சயமாக அதனை ஒலிக்க விட வேண்டும். அவ்வாறு இல்லை எனில் தமிழ் கூறும் நல்லுலகம், தமிழ் பண்பாட்டாளர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்