போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி பழனிசெட்டிபட்டி கோடாங்கிபட்டி, துரைராஜபுரம் காலனி போடி நகர்ப்பகுதிகளில் உதயாநிதி ஸ்டாலின் ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ தேர்தல் வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: “எனக்காகக் கொளுத்தும் வெயிலில் நீங்கள் காத்து உள்ளீர்கள். இதிலிருந்து தெரிகிறது நீங்கள் முடிவு பண்ணிவிட்டீர்கள், உதயசூரியனுக்கு வாக்களிப்பது என்று. உங்கள் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் நீங்கள் வாக்களிப்பதற்கு தலைவர் விரைவில் வெற்றி வேட்பாளரைக் கொடுப்பார். அதற்கு வாக்களியுங்கள், திமுகவை 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இந்த போடி சட்டமன்ற தொகுதியில் ஜெயிக்க வைக்க வேண்டும்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வெற்றி தொகுதியான, அதிமுகவின் கோட்டையாக இருந்த ஆண்டிபட்டியைக் கடந்த இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி மக்கள் திமுகவை வெற்றி பெற வைத்து அதிமுகவின் கோட்டையை உடைத்தனர். அதேபோன்று போடியிலும் நீங்கள் திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும். தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய ஜிஎஸ்டி நிதி, புயல் மழை வெள்ளம் சேதங்களுக்கு தர வேண்டிய நிதி தராமல் மத்திய பட்ஜெட்டில் பணம் இல்லை என்று கூறிவிட்டு, பாராளுமன்றம் கட்டுவதற்குப் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் தற்போது பணிகள் நடந்து வருகிறது. மோடி சொகுசு விமானத்தில் செல்வதற்கு 7000 கோடி ரூபாயில் சொகுசு விமானம் வாங்கியுள்ளார். அது யார் பணம், மக்கள் வரிப்பணம் தமிழகத்தின் பணம். இதைக் கேட்க வேண்டியது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்தான்.
ஆனால் அவர் இந்த நிதிகளைக் கேட்காமல் அவர்களுக்கு அடிமையாக உள்ளார். எடப்பாடியார் முதலமைச்சர் ஆவதற்கு நீங்கள் ஓட்டு போட்டீர்களா? எப்படி அவர் முதலமைச்சர் ஆனார். சசிகலா அம்மையாரின் காலைப் பிடித்து, முட்டிப் போட்டு, தவழ்ந்து சென்று முதல்வரானார். இதை நான் சொன்னதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார். இதற்கு நான் மன்னிப்பு கேட்க முடியாது. நான் கலைஞருடைய பேரன். ஓபிஎஸ்-க்கு ஒரு செல்லப் பெயர் உண்டு, அன்புமணி ராமதாஸ் வைத்த பெயர். அது தமிழகம் முழுவதும் பேமஸ் ஆகிவிட்டது.
மூன்று முறை ஓபிஎஸ் அவர்கள் முதல்வராக இருந்துள்ளார். ஆனால் தேனிக்கும் எந்த வளர்ச்சியும் இல்லை, போடிக்கும் எந்த வளர்ச்சியும் இல்லை. கோடி கோடியாக ஊழல் செய்து பதுக்கி வைத்துள்ளார். ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருக்கும் போட்டி, யார் அதிக அளவில் மோடிக்கு ஜால்ரா அடிப்பது என்று. ஆனால் ஓபிஎஸ்-க்கு வீட்டிலும் போட்டி உண்டு. யார் அதிகமாக ஜால்ரா அடிப்பது என்று. விவசாய மசோதா, குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றிற்கு ஆதரவு அளித்தவர்கள் இவர்கள். ஓபிஎஸ் தனது குடும்பம் மற்றும் பினாமி பெயரில் கொள்ளை அடித்து கோடி கோடியாக ஊழல் செய்துள்ளார். ஒபிஎஸ் டீக்கடைதான் வைத்துள்ளார். ஆனால் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள கம்பெனிகள் வைத்துள்ளார்.
இந்தப் பணம் எப்படி வந்தது. உலகத்திலேயே டீக்கடை வைத்து இவ்வளவு பணம் சம்பாதித்தது ஓபிஎஸ் மட்டும்தான். ஓபிஎஸ் 2000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களைக் கேரளாவில் வாங்கியுள்ளதாக கேரள பத்திரிக்கையில் செய்தி வெளிவந்துள்ளது. எடப்பாடியார் கொண்டு வந்த ரோடு காண்ட்ராக்ட் 6,000 கோடி மதிப்புள்ள இந்த காண்ட்ராக்டை அவர் சொந்த மாமனாருக்குக் கொடுத்துள்ளார். எம்ஜிஆருக்கு விசுவாசமாக இல்லை, மறைந்த ஜெயலலிதாவிற்கு இவர்கள் விசுவாசமாக இல்லை. ஜெயலலிதா இனி எந்த காலத்திலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று சவால் விட்டார். உண்மையில் அந்த அம்மாவைப் பாராட்ட வேண்டும்.
தமிழக அமைச்சரவையில் ஒவ்வொரு அமைச்சர்களுக்கும் பெயருண்டு குட்கா பாஸ்கர், டயர்நக்கி, தர்மாகோல் செல்லூர் ராஜூ என எல்லாருக்கும் பெயர் உண்டு. இந்தப் பகுதிக்கு மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும், பதினெட்டாம் கால்வாய் திட்டம் மூலம் முறையாக எல்லா குளங்களுக்கும் தண்ணீர் கொடுக்கப்படும், குரங்கனி டாப் ஸ்டேஷன் சாலை அமைக்கப்படும், போடி மருத்துவமனையை விரிவுபடுத்தி அனைத்து வசதிகளும் கொண்டு வரப்படும், இந்தப் பகுதிகளில் நீண்ட நாள் கோரிக்கையான நியூட்ரினோ திட்டம் ரத்து செய்யப்படும், ஓபிஎஸ் சொத்துக்களை எல்லாம் வெளியில் கொண்டு வந்து அதனை மக்களிடம் கொடுக்கப்படும், ஜெயலலிதா இறப்பின் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்கப்படும்” என்று கூறினார்.
இதில் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், தேனி ஒன்றியச் செயலாளர் சக்கரவர்த்தி, முன்னாள் எம்எல்ஏ மூக்கையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், ஜீவா உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.