டி.டி.வி.தினகரனும் ஓ.பி.எஸ்.தம்பி ஓ.ராஜாவும் திடீரென சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும் தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மகன் ராம்நாத் துளசி வாண்டையாருக்கும் கடந்த மாதம் திருவண்ணாமலையில் திருமணம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, தஞ்சையில் உள்ள பூண்டி புஷ்பம் கல்லூரி வளாகத்தில் நேற்று திருமண வரவேற்பு விழா நடைபெற்றது. இதில் சசிகலா உள்பட முக்கிய பிரமுகர்கள் மற்றும் அமமுகவைச் சேர்ந்த மாநில நிர்வாகிகள், தொண்டர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல்வருமான ஓ.பி.எஸ்.சின் தம்பி ஓ.ராஜா கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பின்னர் டிடிவி தினகரனுடன் மேடையிலேயே சிறிது நேரம் நின்று ஓ.ராஜா பேசிவிட்டுச் சென்றார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.
சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பி.எஸ். சசிகலா குறித்துப் பேசும்போது, தலைமை கழக நிர்வாகிகள் கூடிப் பேசி முடிவு எடுப்பார்கள் என தெரிவித்தார். இந்தப் பதில் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், திடீரென டிடிவி மகளின் திருமண வரவேற்பு விழாவில் ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜா கலந்துகொண்டதும், டி.டி.வி. தினகரனுடன் பேசியுள்ளதும் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.