
தேனி மாவட்டத்தில் உள்ள தன் சொந்த தொகுதியான போடி தொகுதியில் மூன்றாவது முறையாக துணை முதல்வர் ஓபிஎஸ் களமிறங்கியுள்ளார். அவர் மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். இந்த நிலையில் போடியில் உள்ள குலாலர் பாளையம் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில், ஒரு சமுதாய பிரிவினரை சந்தித்து ஆதரவு திரட்டச் சென்றார் ஒ.பன்னீர்செல்வம்.
அப்போது அதே சமுதாயத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் திருமண மண்டபத்தின் முன்பு திரண்டு ஓபிஎஸ் க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் இருதரப்பினர் இடையே பிரச்சினை ஏற்பட்டு, அப்பகுதியில் தள்ளுமுள்ளு நடந்தது. காவல்துறையினர் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோதும் சுமுகமான சூழல் ஏற்படாததால் தடியடியில் ஈடுபட்டனர். மேலும் திருமண மண்டபத்தில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது இளைய மகன் ஜெயபிரதீப் ஆகியோர் பிரச்சினைகள் ஏற்படும் முன் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் இருந்து மற்றொரு தரப்பினர் கலைந்து சென்றதால், அப்பகுதியில் ஒருமணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.