“யாராக இருந்தாலும் நாம் சொல்ல நினைப்பதை சொல்ல வைத்து விடுவோம்” என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
சென்னை சங்கமம் எனும் 'நம்ம ஊரு திருவிழா' நிகழ்ச்சி நேற்று சென்னை தீவுத்திடலில் துவங்கியது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பல்வேறு நாட்டுப்புறக் கலைஞர்கள் தங்களது கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்த விழாவில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி, தொழிற்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கு பின் எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்வில் தமிழ்நாடு என்று சொல்லியுள்ளார் ஆளுநர். யாராக இருந்தாலும் நம்ம சொல்ல நினைப்பதை சொல்ல வைத்துவிடுவோம் தானே. மீண்டும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இதை அரசு எடுத்து நடத்துகிறது என்பதால் நாளை யாராலும் இந்த நிகழ்வை தொடர்ந்து நடத்த முடியும். தனிநபர் தேவை என்பது இல்லாமல் அதைத் தாண்டி இந்நிகழ்வுகள் நடைபெறும் என்பதை எல்லாருக்கும் தந்துள்ள நிகழ்வு” எனக் கூறினார்.